Home Materials Which is best TMT 500 or TMT 500D

Which is best TMT 500 or TMT 500D

by Er Karthikeyan

Which is best Steel TMT 500 or TMT 500D ?

எந்த கம்பி வாங்குவது TMT 500 அல்லது TMT 500D ? எது சிறந்தது ?

வீடு கட்டும் எல்லோருக்கும்  குழப்பமாய் இருக்கும்  மற்றொரு விஷயம் இந்த கம்பி விஷயம் தான்.

கட்டிடத்திற்கு எப்படி சிமெண்ட், மணல், செங்கல் போன்றவற்றின் தரம்  முக்கியமோ அதேபோல் கம்பியின் தரமும் முக்கியம்.

கம்பியின் அடிப்படை விஷயங்கள் :

கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்தும் கம்பிகளில் மூன்று   வகை உண்டு, ஒன்று சாதாரண கம்பி, இரண்டு  முறுக்கு கம்பி. மூன்றாவது TMT முறுக்கு கம்பி 

சாதாரண கம்பி  என்றால் என்ன ?

சாதாரண கம்பி என்றால் ஆரம்ப காலங்களில்  அதாவது கான்க்ரீட் உபயோகப்படுத்த ஆரம்பித்த காலங்களில் வெறும் உருட்டு கம்பிகளே உபயோகப்படுத்த பட்டது அதுவே சாதாரண கம்பி என்பார்கள்.  இப்போதும் ஜன்னல்கள் அல்லது வென்டிலேட்டர்களில் குறுக்கே உருட்டு கம்பிகள் உபயோக படுத்துகின்றோமே அந்த மாதிரி கம்பிதான்.  

முறுக்கு கம்பிகள் என்றால் என்ன ?

நாம் சாதாரணமாக ஒரு துணியை கயிறாக பயன்படுத்த வேண்டி இருந்தால் என்ன செய்வோம் அதை ஒரு முறுக்கு முறுக்கி அதனை பலப்படுத்துவோம் தானே அதேதான் நமக்கே தெரியுமல்லவா சாதாரணமாக துணியை நாம் பயன்படுத்தினால் அதன் டெம்பர் குறைவு என்பது அதே விஷயம்தான் கம்பியில் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது  முறுக்கு கம்பி. இது சாதாரண கம்பியை விட அதிக வலுவானது.

TMT முறுக்கு கம்பிகள் என்றால் என்ன ?

முறுக்கு கம்பியை சூடு பண்ணி உடனடியாக குளிர்வித்து வலுவூட்டப்படும் கம்பியே TMT கம்பி (Thermo-Mechanically Treated Bars).  இது முறுக்கு கம்பியை இன்னும் வலுவாக்கி தருகிறது.  இதன் மூலம் நமது கம்பி பயன்பாட்டை 17% வரை குறைக்கிறது.

இப்போது தெரிகிறதா நாம் என்ன கம்பியை உபயோக படுத்த வேண்டும் என்று.  

இன்னும் சில விஷயங்கள் :

இந்திய தர நிர்ணய  கட்டுப்பாட்டு அமைப்பு கம்பிகளின் தரத்தையும் நிர்ணயித்துள்ளது.  Fe415, Fe500 என்ற பிரிவுகளை கட்டுமானத்திற்கு என்று நிர்ணயித்து உள்ளது. 

Fe415 என்பது ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 415 N (நியூட்டன்) அளவு இழுவிசை வலிமை கொண்டதாகும், 

ஒரு கிலோகிராம் = 9.81 நியூட்டன் 

415/ 9.81 = 42.3 Kgf /சதுர மில்லிமீட்டர்  (கிலோகிராம் இழுவிசை)

Fe415 என்ற குறியீடு கம்பி ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 42.3 கிலோகிராம் இழுவிசை வலிமை கொண்டது.

அதேபோல் 

Fe500 என்பது ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 500 N (நியூட்டன்) அளவு இழுவிசை வலிமை கொண்டதாகும், 

ஒரு கிலோகிராம் = 9.81 நியூட்டன் 

500/ 9.81 = 50.97 Kgf /சதுர மில்லிமீட்டர்  (கிலோகிராம் இழுவிசை)

Fe500 என்ற குறியீடு கம்பி ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 50.97 கிலோகிராம் இழுவிசை வலிமை கொண்டது.

நாம் கம்பியில் பார்க்கும் 500 என்ற குறியீடு இந்த Fe500 என்ற அளவையே குறிக்கிறது.

சரி அது என்ன 500 D ?

Fe500 குறியீடு கம்பியையே சில சிறப்பு தரம் கூட்டப்பட்டு வருபவையே இந்த 500D  என்ற வகை கம்பி அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

சாதாரணமாக Fe500 வகை கம்பிகளில் கார்பன் அளவு 0.30 சதவிகிதம் இருக்கும் அதுவே 500Dயில் கார்பன் அளவு 0.25 சதவிகிதமே இருக்கும். அதேபோல் 

Tmt500

சல்பர் அளவு 500ல் 0.055 சதவிகிதம் மற்றும் 500Dல் 0.040 சதவிகிதம்.  சரி இப்படி கார்பனும் சல்பரும் குறைவதால் என்ன பயன்.  அது ஓன்னும் இல்லைங்க சுற்று சூழல்களால் துரு ஏற்படுவதை தள்ளிப்போடும்.  இந்த வார்த்தையை நல்லா கவனிங்க “சுற்று சூழல்களால்”  நான் ஏன் இந்த வார்த்தையை சொல்றேன்னா ஒரு கான்கிரிட் சரியான விதத்தில் காற்று மற்றும் நீர் புகாதவாறு அமைத்து விட்டால் எந்த கம்பியும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துரு ஏறாது.  அதே கம்பி திறந்த வெளியில் இருந்தால் நான்கு ஐந்து நாட்களிலேயே துரு ஏறிவிடும்.  

500D கம்பி அவசியமா ?

500 அவசியம் ஏனென்றால் உங்களின் கம்பி தேவையை 17% வரை குறைக்க கூடியது.  அதாவது அதாவது 415 பயன்படுத்துவதை விட நீங்கள் 500 பயன்படுத்தும்போது 17% சதவிகிதம் குறைவாக பயன்படுத்தினாலே அந்த அளவு கிடைத்து விடும்.   

ஆனால் 500 கும் 500D க்கும் அந்த வித்தியாசம் இல்லை வலிமையில் இரண்டும் ஒரே அளவே அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் அதன் தன்மைகளில் பயன்பாடுகள் உண்டு.  ஆனால் அது நமக்கு அதிகப்படியான பயன்களே தவிர அடிப்படை பயன்களோ  அல்லது அத்தியாவசிய பயன்களோ இல்லை.  மேலும் விலையிலும் 500ஐ விட 500D கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகம் ஆகும்.  எனவே பட்ஜெட்டில் வீடுகட்டுவோர்க்கு 500 போதுமானதே  500D என்பது அதிக சுமையே,  எனக்கு எதிலும் முழு தரம் இருக்க வேண்டும் விலை ஒரு பொருட்டல்ல என்பவர்களுக்கு 500D தேவையான ஒன்று.

இன்னொரு முக்கியமான விஷயம் 415ஐ விட 500 என்பது 17 சதவிகிதம் வரை அதிக வலிமையானது என்று சொல்லிவிட்டேன்.  ஆனால் நாம் 500கு மாறிவிட்டோமே தவிர அந்த அதிகப்படியான கம்பி பயன்பாட்டை குறைக்கவில்லை.  அதாவது 415 கம்பி உபயோகப்படுத்தும்போது என்ன கம்பி அளவுகள் பயன்படுத்தினோமோ அதே கம்பி அளவுகளையே 500கும் பயன்படுத்துகிறோம்.  இது 17% அதிக கம்பி கம்பி பயன்பாட்டையே குறிக்கிறது.  இதுவும் நமது வீட்டு பட்ஜெட்டை பாதிக்கும் செயலே.

எனவே உங்கள் வீட்டு வரைபடத்தை முடிவு செய்தபின் ஒரு கட்டிட பொறியாளர் அல்லது கட்டிட வல்லுநர் போன்றோரை அணுகி உங்களின் வீட்டிற்கு எந்த அளவு கம்பி எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து பயன்படுத்துங்கள் தேவையில்லாமல் அதிக அளவு கம்பிகளை உபயோகித்து பணத்தை வீணாக்காதீர்கள்.   அளவுக்கு மீறினால் அதுவும் தவறுதான்.  

கம்பிகள் அதிகமாக இருந்தால் அதிக வெயில்படும் இடங்களில் கீறல்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் ஏனென்றால் கான்கிரீட்டை விட கம்பிக்கு வெப்பத்தால் விரிவடையும் தன்மை அதிகம்.

அடுத்த கட்டிடங்களை பார்த்து கம்பிகளை நிர்ணயிக்காதீர்கள் உங்கள் கட்டிடத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப மதிப்பீடு செய்து பயன்படுத்துங்கள் உங்கள் பணம் விரையம் ஆகாது.

கம்பிகளை வாங்கும்போது தரமான கம்பியை பார்த்து வாங்குங்கள் நிறைய கம்பி நிறுவனங்கள் வந்து விட்டன அவற்றில் சில  TMT 500 என்று பிரிண்ட் செய்து சாதாரண கம்பியை விற்கின்றனர்.   இவற்றை நீங்களே சுலபமாக கண்டு பிடித்து விடலாம். கம்பிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சில அளவு விஷயங்கள் உள்ளது அவற்றை விட சிறிது அளவு வேறு பட்டால் ஏற்று கொள்ளலாம் நிறைய வேறுபாடு இருந்தால் ஒதுக்கிவிடுங்கள் 

அளவுகள் :

கம்பிகள் சாதாரணமாக 6mm, 8mm, 10mm, 12mm, 16mm, 20mm, 25mm என்ற அளவுகளில் கிடைக்கும்.

சாதாரண முறுக்கு கம்பிகள் 36 அடி நீளமும், TMT முறுக்கு கம்பிகள் 40 அடி  நீளமும் இருக்கும்.

40 அடி நீளமுள்ள ஒரு TMT கம்பி சராசரியாக இருக்கும் எடை அளவுகள் :

6mm  – 2.7 Kg.

8mm – 4.8 Kg.

10mm – 7.5 Kg.

12mm – 10.8 Kg.

16mm – 19.2 Kg.

20mm – 30Kg.

25mm – 46Kg.

இந்த அளவுகளில் சிறு வித்தியாசங்களை ஏற்று கொள்ளுங்கள் அதிக வித்தியாசம் இருந்தால் ஏற்று கொள்ளாதீர்கள்.

You may also like

Leave a Comment