கட்டிட வேலைகளுக்கு OPC அல்லது PPC எந்த சிமெண்ட் சிறந்தது ?
ஓபிசி (OPC ) Ordinary Portland Cement :
ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பது சாதாரணமாக சுண்ணாம்பு, ஜிப்ஸம் மற்றும் தேவையான மூலப்பொருட்களை நன்கு அரைத்து தயாரிக்கப்படும் சிமெண்ட் ஆகும். இது மூன்று வகையான கிரேடுகளில் கிடைக்கிறது. அவைகள் OPC 33கிரேடு, OPC 43கிரேடு,OPC 53கிரேடு ஆகும். இது உலக அளவில் அதிகமாக பயன்படுத்த படும் சிமெண்ட் ஆகும்.
இது சிறந்த ஓட்டும் தன்மையும் ஒத்திசைவு தன்மையும் பெற்றிருப்பதால் இதன் கடினத்தன்மை சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் இது செட்டிங் நேரத்தில் அதிக வெப்பத்தினை வெளிப்படுத்தும் அதனால் இதற்க்கு அதிக நீராட்டம் (Curing) தேவைப்படும்.
இதன் வலிமையடையும் தன்மை, உறுதிப்படும்போது ஏற்படும் விரிசல்கள் போன்றவை மிதமான அளவிலேயே இருக்கும்.
அதிகமாக இந்த சிமெண்ட் வாட்டர் டேங்க், பாலங்கள், அணைகள் போன்ற கான்கிரீட் அமைப்புகளுக்கு மிகவும் பயன்படுத்த படுகிறது.
பிபிசி (PPC) Portland Pozzalana Cement:
ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட்வுடன் போஸ்சலானா பொருட்கள் அதாவது நிலக்கரி சாம்பல் போன்ற பொருட்கள் 15 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதம் வரை கலந்து தயாராகும் சிமெண்ட். இதில் 33கிரேடு மட்டுமே உள்ளது.
இது கெமிக்கல் பொருட்களுக்கு சிறந்த தடுப்பாக உள்ளது. இது செட்டிங் ஆகும் போது குறைந்த அளவே வெப்பத்தை வெளிப்படுத்தும். ஆரம்ப வலிமை குறைவாக இருந்தாலும் முழு செட்டிங் நேரம் முடிந்த பிறகு இது ஓபிசி ஸ்மென்டின் 33 கிரேடு வலிமையை அடைந்துவிடும் .
பொஸ்சலானா பொருட்கள் தொழிற்கூட கழிவுகளில் இருந்து எடுப்பதால் இந்த சிமெண்ட் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு வழிகாட்டுகிறது.
இது ஓபிசி சிமெண்டை விட விலை மலிவு. இந்த சிமெண்ட் பூச்சு மற்றும் செங்கல் கட்டுமானம் போன்றவைகளுக்கு ஏற்றவை.
இது சிறந்த கடல்நீர் அரிப்பை தாங்கும் சிமெண்ட் ஆகும் . அதனால் கடற்கரை பகுதிகளில் இந்த சிமெண்ட் பயன்படுத்துவது மிக சிறந்த தேர்வாகும்.
சிமெண்டின் கிரேடு வகைகள் :
இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் (Bureau of Indian Standards (BIS)) OPC சிமெண்ட் மூன்று கிரேடுகளாக வகைப்படுத்தபட்டுள்ளது. 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு அவைகள் ஆகும்.
33 கிரேடு என்பது சிமெண்ட் 28 நாட்களில் 330 கிலோ / சதுர செமி தாங்கும் திறனை அடையும் என்பதாகும்.
43 கிரேடு என்பது சிமெண்ட் 28 நாட்களில் 430 கிலோ / சதுர செமி தாங்கும் திறனை அடையும் என்பதாகும்.
53 கிரேடு என்பது சிமெண்ட் 28 நாட்களில் 530 கிலோ / சதுர செமி தாங்கும் திறனை அடையும் என்பதாகும்.
33 கிரேடு என்பது மிக குறைந்த அளவாக இருப்பதால் சாதாரணமாக எங்கும் பயன்படுத்துவது கிடையாது.
43 கிரேடு என்பது சாதாரணமாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த படுகிறது.
53 கிரேடு என்பது அதிக வலிமை தேவைப்படும் இடங்களுக்கு பயன்படுகிறது. உதாரணமாக பாலங்கள், அடுக்கு மாடி கட்டிடம் போன்றவைகள்.
43 கிரேடு சிமெண்டில் மிதமான வேகத்தில் இதன் செட்டிங் இருக்கும் முழு செட்டிங் நாட்கள் முடிவடையும் போது முழு வலிமையை பெற்றிருக்கும்.
53 கிரேடு சிமெண்டில் மிக வேகமாக இதன் செட்டிங் இருக்கும் அதனால் அதிக வெப்பம் வெளிப்படும். இதானால் சீரான நீரோட்டம் (Curing ) தேவைப்படும். இல்லையென்றால் சிறு வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
43 கிரேடை விட 53 கிரேடு சிறிது விலை அதிகம்.
PPC சிமெண்டில் 33 கிரேடு மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.
எந்த சிமெண்டை எந்த வேலைக்கு பயன்படுத்துவது ?
சாதாரணமாக நாம் கட்டும் செங்கல் கட்டுமானங்களுக்கு PPC சிமெண்ட் தாராளமாக பயன்படுத்தலாம். அதே போல் பூச்சுகளுக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.
கான்க்ரீட் வேலைகளுக்கு OPC சிமெண்ட் பயன்படுத்தலாம் அதிலும் நமது தேவைகளுக்கு ஏற்ப 43 கிரேடு அல்லது 53 கிரேடு பயன்படுத்தலாம்.
எந்த சிமெண்ட் பயன்படுத்தினாலும் நீராட்டம் மிக அவசியம்.
எத்தனை நாட்கள் நீராட்டம் செய்ய வேண்டும் ? (Required Curing Days )
ஓபிசி சிமெண்ட் என்றால் 10 நாட்கள்
பிபிசி சிமெண்ட் என்றால் 14 நாட்கள்