My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

மழைநீர் அறுவடை அவசியமா? எவ்வாறு அறுவடை செய்வது ?

why want to save rainwater and how to save rainwater

0 145

Get real time updates directly on you device, subscribe now.

மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?

பெய்யும் மழைதண்ணீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் அறுவடையாகும். நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை அதாவது வீணாகும் மழை நீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும்

ஏன் மழைநீரை சேகரிக்க வேண்டும்?

இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், மழைநீரை அறுவடை செய்ய வேண்டும். நம்மிடமுள்ள தண்ணீரிலேயே மழைநீர்தான் மிகவும் சுத்தமானது. தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை வீணாக்காமல் சேமித்தால் நல்லது.

மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்

  • நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்
  • கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.
  • அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.
  • இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு
  • மழைநீர் அறுவடையினால் வெள்ள சேதம் குறையும், மேல் மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பு எந்தபகுதிகளுக்கு ஏற்றது?

  • நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு
  • அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும் பகுதிகளுக்கு
  • மழைநீர் நில்லாமல் ஓடக்கூடிய பகுதிகளுக்கு
  • மலைபிரதேசங்களில் மழைநீர் அறுவடை அவசியம்
  • அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு
  • பிரச்சினைக்குரிய நீர்வளம், உப்புத்தன்மை அதிகமுள்ள  பகுதிகளில் மழைநீர் அறுவடை தேவை.
  • மக்கள் தொகை/எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளுக்கு
  • மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு
  • கிடைக்கும் நீர் குடிப்பதற்கும், மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்த முடியாத வகையில் இருக்கும் பகுதிகளில், மழைநீர் அறுவடை செய்ய வேண்டும்.

மழைநீர் சேகரிப்பில் கிடைக்கும் நீரை எதெதற்கு பயன்படுத்தலாம்?

  • குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையல் செய்வதற்கு
  • கழிவறைகளில் பயன்படுத்தலாம்.
  • துணி துவைப்பதற்கு, பயிர்களுக்கு பாசனம் செய்ய
  • கால்நடைகளுக்குஎன எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்யவும் சேமிக்கும் மழை நீரை பயன்படுத்தலாம்.

எப்படி மழைநீரை சேமிப்பது ?

எந்த மழைநீர் சேகரிப்பு  அமைப்பிலும் மூன்று உறுப்புகளிருக்கும். அவை மழை கொட்டும் பரப்பு, நீரை கொண்டு போகும் அமைப்பு மற்றும் சேமிப்பு அமைப்பு.

மழைநீர் சேகரிப்பில்  இரண்டு முறைகள் உள்ளன.

  • வீட்டுக்குகூரை அல்லது கட்டிடக்கூரைகளிலிருந்து மழைநீரை சேமிக்கும் முறை
  • நிலங்களில் அல்லது பெரிய நிலப்பரப்புகளிலிருந்து மழைநீரை சேமித்து, பயிர் பாசனத்திற்கு பயன்படுத்தும் முறை.

நகர்புறங்களில் நிலத்தடிநீர் சேமிப்பு

நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும். கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.

i. ரீசார்ஜ் குழி

  • நீர் ஊடுருவும் பாறைகள் நிலமட்டத்தில் காணப்படும்  பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது.
  • இம்முறை 100 ச.மீட்டர்  கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கவும் உதவுகிறது. மேலான பூமி நீர் மட்டம் உள்ள இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது.
  • இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம்,  2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன. கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு  சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும். அதனை, எளிதாக அகற்றிவிடலாம்.  சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது.
  • குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு/சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம்.
  • குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்படவேண்டும்.
  • முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது.

ii. ரீசார்ஜ் டிரன்ச்

  • இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 0.5 – 1 மீட்டர் அகலம், 1 – 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும்.
  • நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன.
  • நீர் சேமிப்பு குழிக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம்.
  • முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும்.

iii. குழாய் கிணறுகள்

  • மேல்மட்ட நிலத்தடிநீர் விரைவில் உளர்ந்து விடுவதால், கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில், மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம்.
  • 10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும். முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும். குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, ‘T’ வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும். குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ  விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும். PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும். வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும்
  • கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வடிகட்டும் குழியின் அளவு கூரையிலிருந்து கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். வடிகட்டும் குழியானது, அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும். குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது. சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது.

iv. குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு

  • மேல்  மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில்,  கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில், குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு, சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன.
  • இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம்,  தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது.
  • சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது.
  • 1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி, சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு கட்டப்படுகிறது. இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது.
  • கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின்  அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை அமையும்.
  • குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக, மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது.
  • நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள, 3-5 மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது. வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள  ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு, ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது.

மூலம் : மத்திய நீர்வள அமைச்சகம், மத்திய நிலத்தடி நீர் வள வாரியம், பரிதாபாத்.

Comments
Loading...