My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

வீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்?

Kitchen Vastu for your kitchen

0 618

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு வீட்டுக்கு எந்த இடத்தில் சமையலறை இருந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்ப்போம்.

வடகிழக்கு : – இது ஈசான்ய மூலை சமையல் அறை. ஈசான்யத்தின் புகழை பல சமயம் குறிப்பிட்டு இருக்கிறேன். இது மகாலஷ்மிக்கு உரிய இடமாகவும், ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையின் ஸ்தானம் எனவும் அழைக்கலாம். ஆக இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே சமையலறை இருப்பது தோஷம்.

அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதர நிலையும் பாழ்படும். இந்த வடகிழக்கில் சமையலறை சிறப்பாகாது. ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவனது வளர்ச்சிகள் கெடும். சிலர் இந்த பகுதி சமையல் அறைதான் தங்களுக்கு யோகமே செய்தது என்பார்கள். ஆனால் அது தவறு.

கிழக்குமையம் : – இது, வடகிழக்கு சமையலறையை போன்று பெரும்கெடுபலன்கள் செய்யாது என்றாலும், இதுவும் விரும்பதகுந்ததல்ல. காரணம் கிழக்குமையத்தில் அமைப்பதால் ஒரு பக்கம் வடகிழக்கையும் மறுப்பக்கம் தென்கிழக்கையும் சார்ந்து பலன்களை ஏற்ற தாழ்வோடு தந்து கொண்டிருக்கும். தென்கிழக்கு : – இது சமையலறைக்கு நல்லதொரு இடமாகும். இந்த பகுதியில் சமையலறை அமையும் போது, அந்த அறைக்கு தென்கிழக்கில் அடுப்பை வைக்க வேண்டும். அத்துடன் பாத்திரங்களை கழுவ தண்ணீர் குழாய் அமைக்கும் போது சமையலறையில் வடகிழக்கில் அமைத்தால் நல்லது. ஆனால் இந்த தண்ணீர் குழாய்யை தென்கிழக்கில் அமைத்துவிடக்கூடாது. இதனால் உடல்நல பாதிப்பும், கருத்து வேறுபாடும் உண்டாகும். ஆகவே தண்ணீர் குழாய்யை தென்கிழக்கு சமையலறைக்குள், வடகிழக்கு மூலையில் அமைத்து முழுமையாக பலனை காணுங்கள்.

தெற்கு மையம் : – இந்த பகுதி சமையலறை நல்லதல்ல. பெண்களால் சோதனைகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படாது. நிறைய மருத்துவ சிகிச்சைகளும் உண்டாகும். தென்மேற்கு : – சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும். மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும். இந்த தென்மேற்கு சமையலறை எப்படியும் ஒருநாள் தீமையே செய்யும்.

மேற்கு மையம் :.- இது மிக சுமாரான பலன்களையே தரும். கிழக்கு மையத்திற்கு சொன்ன பலன்களே இதற்கும் பொருந்தும். வரவுகேற்ற செலவாகவே வாழ்க்கை நிலை நகரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவு நன்மை செய்தாலும் வியபாரிகளுக்கு இது ஏற்றதல்ல. நண்பர்களும் விரோதியாகும் நிலை, நல்ல வாய்ப்புகளும் கைநழுவும் சூழ்நிலை உண்டாகும்.

வடமேற்கு : – இது சமையலறைக்கு நல்லதொரு இடம் என்று ஒரே வரியில்சொல்லலாம். புதிய நண்பர்களும் அவர்களால் தொழில் முன்னேற்றமும் அமையும். கட்டட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வடக்கு மையம் : – இங்கே சமையலறை கூடாது. இதனை குபேர திசை என்கிறது வாஸ்து கலை.  (சிலர் தென்மேற்கை குபேர மூலை என்கிறார்கள் அது தவறு. தென்மேற்கு கன்னி மூலையாகும்) வடக்கு மையத்தில் சமையலறை அமைந்தால் பொருளாதரம் கருகும். எதிலும் சுபிச்சத்தை தராது. தொழில் தடங்கள் உண்டாகும். எப்போதும் உறவினர்களின் வருகையும் அதனால் வீண் சச்சரவுகளும் ஏற்படும்.

தென்கிழக்கு சமையலறைக்கும் வடமேற்கு சமையலறைக்கும் மாறுபட்ட ஒருசில பலன்கள் உள்ளது அவற்றை பாப்போம் :

தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை. நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் பலன்களை அனுபவிப்பதற்கு இந்த பகுதி சமையலறை மிக சிறப்பாக உதவி புரியும்.

அதேபோல –

வடமேற்கு சமையலறையை பற்றி சொல்லவேண்டுமெனில், இதுவரை நீங்கள் எத்தனையோ வாடகை வீடுகளுக்கு மாறி இருப்பீர்கள் பல்வேறு வாஸ்து தன்மைகளை அனுபவ ரீதியாக கண்டிருப்பீர்கள். இதில் வடமேற்கு மூலையில் சமையலறையாக கொண்ட வீட்டிற்கு குடிவந்த பின்னர் அநேகமாக நல்ல மாற்றங்களை உணர்ந்திருப்பீர்கள்.

உங்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்ற கூடிய சக்தி வடமேற்கு சமையலறைக்கு உண்டு. இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு, வடமேற்கு சமையலறை உள்ள வீடாக குடிவந்த பின்னர் சொந்த வீடு வாங்கி செல்கிற யோகத்தை தந்திருக்கிறது.

ஆடம்பர பொருட்கள் சேரும். நல்ல தொழில் வளம் அமையும். இப்படி நன்மைகள் பலவற்றை பட்டியலிட்டுகொண்டே சென்றாலும் ஒரே ஒரு குறை இந்த வடமேற்கு சமையலறைக்கு உண்டு. அது –

மருத்துவ சிகிச்சை- திடீர் விபத்துகள் போன்ற சஞ்சலங்களையும் தருகிறது.

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல நன்மைகள் ஒருபக்கம் வழங்கி வந்தாலும், இதுபோன்ற மனசஞ்சலங்கள் தந்து கொண்டிருக்கும். ஆனாலும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடாது.

தென்கிழக்கு சமையல் அறை வைக்க முடியாத பட்சத்தில் வடமேற்கில்தான் சமையலறை அமைதிட வேண்டுமே தவிர வேறு எங்கும் சமையலறை இருப்பது வாஸ்துமுறைப்படி நல்லதல்ல.

சரி –

தோஷமான வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் என்ன என்று இப்போது பார்ப்போம்.

வீட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு சமையலறையை மாற்ற இயலாத பட்சத்தில், இருக்கிற சமையலறைக்குள் சின்ன சின்ன மாற்றங்களை செய்யலாம். குறிப்பாக அடுப்பு மேடை கிழக்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். அடுத்து முக்கியமாக பாத்திரங்களை கழுவ உபயோகிக்கும் தண்ணீர் குழாய், சமையலறையின் வடகிழக்கு மூலையில்தான் பொருத்த வேண்டும்.

சமையலறைக்கு மேடை அமைக்கும் போது, கிழக்கு – தெற்கு – மேற்கில் மேடை அமைக்கலாம். ஆனால் சமைப்பது கிழக்கு நோக்கியதாக இருந்தால் நல்லது. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடக்கு மையத்திலோ அல்லது வடகிழக்கு மூலையாகவோ இல்லாமல், வாயுமூலை எனப்படும் வடமேற்கு பகுதியாக அடுப்பை நகர்த்தி வடக்கு நோக்கி சமைக்கலாம்.

மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் தென்மேற்கு மூலை, மேற்கு மையத்தை தவிர்த்து மேற்குவாயு எனப்படும் வடமேற்கு மூலைக்கு அடுப்பை கொண்டு செல்லலாம்.

ஆனால் –

தெற்கு நோக்கி சமைப்பது நல்லதல்ல.

மற்ற பகுதிகளில் உள்ள சமையலறைகளை விட தென்மேற்கு சமையலறை அதிக கெடுதல் செய்ய கூடியதாகும். வேறு இடத்துக்கு மாற்ற வசதி இருந்தால் மாற்றி விடுவதே நல்லது. இல்லை, அதுவரை தென்மேற்கு சமையலறைக்குள்ளே மேற்கு வாயுமூலைக்கு (வடமேற்கு) அல்லது அக்னி மூலைக்கு (தென்கிழக்கு) பகுதிக்கு அடுப்பை நகர்த்தி உபயோகிப்பது நல்லது.

இதேபோன்ற தவறான வாஸ்து அமைப்போடு சமையலறையை கொண்டவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒருஏழை சிறுவர் சிறுமிக்கு அன்னதானமும்,அருகில் உள்ள சிவன் கோவிலிலோ அல்லது விஷ்ணு ஆலயத்திற்கோ அவரவர் விருப்பப்படி சென்று பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினால் ஸ்ரீஅன்னலஷ்மியின் திருவருளால் குடும்பத்திற்கு வறுமை நிலைமையோ அல்லது தோஷமான சமையலறை அமைப்பால் கெடு பலன்களையோ நெருங்க விடாது.

பொதுவாக இரவு நேரத்தில் சிறிது உணவாவது இருக்க வேண்டும். சுத்தமாக துடைத்து வைத்தார் போல உணவு பாத்திரங்கள் இருக்க கூடாது. ஒரு வீட்டின் வாஸ்து தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது சமையலறையாகும். சமையலறை சிறப்பாக அமைந்துவிட்டால் இறைவன் அருளால் குடும்பத்தின் பொருளாதர வரவில் பங்கம் உண்டாகாது.

Comments
Loading...