My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

கிரேடு பீம் என்றால் என்ன ?

கிரேடு பீம் தாங்கு திறனுக்காக அமைக்கப்படுகின்றன.

0 212

Get real time updates directly on you device, subscribe now.

கிரேடு பீம் தாங்கு திறனுக்காக அமைக்கப்படுகின்றன. பீம்கள் அனைத்து தூண்களையும் இணைப்பதன் மூலம் செயல்களை ஒருமைப்பாட்டாய் மாற்றி அவற்றை அசையாமல் ஆடாமல் காக்கின்றன.

கட்டிடத்தின் ஒட்டுமொத்த சுமை, தூண்கள் வழியே கிரேடு பீமுக்குச் செலுத்தபடும். அதைத் தாங்கி ஃபூட்டிங்க் மூலம் பூமிக்கு கிரேடு பீம்தான் செலுத்துகிறது. பெரும்பாலான கட்டிட விபத்துகள் ஏற்படக் காரணம் கிரேடு பீம் வலிமை இழப்பதுதான்.

இதில் சிறு இடைவெளியோ, விரிசலோ ஏற்படுமாயின் சிறிது சிறிதாக எடையைத் தாங்கும் திறனற்றுக் கட்டிடத்தின் தூண்களும், சுவர்களும் பாதிப்படையும். இதனால் கட்டிடம் உடைந்து சரியும் நிலையும் ஏற்படுகின்றன.

இவ்வாறு நடக்கச் சிறிது காலம் ஆகலாம். இதைச் சில அறிகுறிகள் மூலம் முன்னரே உணரலாம். சில கட்டுமானங்களில் பீம் தன்னால் இயன்ற வரையில் கட்டிடத்தின் சுமையைத் தாங்கும். மேலும் அதிக சுமை ஏற்றினால் ஒரு கட்டிடம் திடீரென உடைந்து உள்ளே அழுந்திவிடும்.

சமீபத்தில் நமது இந்தியாவில் மும்பை,டெல்லி நகர்களில் நடந்த சில விபத்துகளை உதாரணமாய்க் கூறலாம். பழங்கால மற்றும் பழமையான கட்டிடத்தில் கூடுதல் அடுக்குத்தளங்கள் அல்லது செல்போன் கோபுரம் அமைத்த சில காலங்கள் கடந்த உடன் இந்த விபத்துகள் ஏற்பட்டிருப்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறோம் எனில் தற்போதைய சுமைகளுக்கும், வருங்காலத்தில் ஏற்றப்படும் அடுக்குகளையும் கணக்கில் கொண்டே தகுந்த கிரேடு பீம்கள் அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

வருங்காலச் சுமையைக் கணக்கிடுவோம்

சிலர் ஒரடுக்குக்கு பீம் அமைத்து வீடு கட்டிக் குடியிருப்பர் பின்னாளில் சில அடுக்குகள் கூடுதலாகக் கட்ட முற்படும்போது தகுந்த ஆய்வாளர்களின் மூலம் சோதித்து அறிவது நன்று. இதற்குச் சில இடங்களில் துளையிட்டோ அல்லது சிறிது சிதைத்தோ மாதிரிகள் எடுத்து செய்யப்படும்.

சிதை சோதனைகளும் (Destructive Test), சிதைக்காமல் ஊடுருவும் கதிர்கள், டிஜிட்டல் கருவிகள் கொண்டு செய்யப்படும் சிதைவுறாச் சோதனைகளும் (Non-Destructive Test) உள்ளன. இன்னாட்களில் கான்கீரீட்டை இடும்போதே சென்சார் ஸ்டிக்கர் பொருத்தி அதன் பிந்தைய வலிமைகளை ஆய்வு செய்யும் வழிகளும் உள்ளன.சுனாமி எதிர்ப்பு கட்டுமானங்களில் தரை பீம்கள் அமைப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

புதிய தனி வீடு கட்டுவோர் போடு மண்ணில் பீம் அமைக்கக் கூடாது. நிலபரப்பு மேல் அமைவதைவிட நிலபரப்புக்கு கீழ் அமைக்கலாம். கிரேடு பீம் அமைக்க அதற்கான தளம் முதலில் அமைக்க வேண்டும்.

இதை அமைக்க எளிதான வழிமுறைகளைப் பார்ப்போம். முதல் வழிமுறை 40mm கருங்கல் ஜல்லியுடன் சிமெண்ட் மணல் கலந்து இடலாம். இது நடுத்தர செலவு பிடிக்கும்.

அடுத்த வழிமுறை கையாளும்போது கிடைக்கும் கால் அரை செங்கற்களை உடைத்து சிமெண்ட் மணல் கலந்து இடலாம் இதில் பழைய வீடுகளில் இருந்து எடுத்த செங்கற்களை உடைத்து பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் அதில் கரையான், செல் தொற்று இருக்க வாய்ப்புள்ளது. புதிய கற்களை ஜல்லியாக உடைத்துப் பயன்படுத்தலாம் இம்முறை மற்ற விதங்களை விட சிக்கனமானது.

அடுத்த வழிமுறை முழு செங்கற்களையோ அல்லது பிளைஆஷ் கற்களையோ சிமெண்ட் மணல் சாந்தால் இணைத்து தூல நீள, அகலத்திற்குப் பரப்பிவிடலாம். இதற்குச் செலவு அதிகம் ஆனால் துல்லியமாக பீம் அமைப்பை இதில் கொண்டுவரலாம்.

 

Comments
Loading...