My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

அத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

ஈசானியம் வாசல் நம்மை ராஜ வாழ்க்கை வாழ வைக்கும்

0 464

Get real time updates directly on you device, subscribe now.

புதிய வருடத்தில் புதிய கட்டுரை தொடர் ஒன்றை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்.  தொடரின் பெயர் “சொந்த வீடு” இதில் நீங்கள் இடம் வாங்குவது முதல் நீங்கள் கட்டும் வீட்டை கிரகபிரவேசம் செய்வது வரை அனைத்து விபரங்களும் இங்கு தரப்படும்.  இதில் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலைகளும் விளக்கப்படும்.  முதல் பகுதியாக எந்த மாதிரி இடம் வாங்குவது என்பதை இந்த கட்டுரையில்  பார்ப்போம்..

ஏற்கனவே இடம் வாங்கியவர்கள் அடுத்த கட்டுரை வரை காத்திருக்கவும்.

அத்தியாயம் 1

முதலில் இடம் வாங்க வேண்டும் என்றவுடன் கிழக்கு பார்த்த மனை வாங்கு அதுதான் சிறந்தது என்றும் வடக்கு பார்த்த மனை தான் சிறந்தது என்றும் பலர் ஆலோசனை வழங்க ஆரம்பித்து விடுவர்.  அது ஒன்றும் இல்லை ஈசானியம் வாசல் நம்மை ராஜ வாழ்க்கை வாழ வைக்கும் வடக்கு பார்த்த மனை மற்றும் கிழக்கு பார்த்த மனைகளில் மட்டுமே நாம் ஈசானிய வாசல் வைக்க முடியும் என்பதாலேயே வடக்கு பார்த்த மனையும் கிழக்கு பார்த்த மனையும் சிறப்பு பெறுகின்றன.

மேலும் படிக்க : வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை !

அதற்காக தெற்கு பார்த்த மனையும் மேற்கு பார்த்த மனையும் வீடுகட்ட உகந்தது இல்லையா அப்படி எல்லாம் இல்லை அந்த மனைகளில் நாம் கன்னிமூலை வாசல் வைக்கலாம் இதுவும் மிக சிறந்த பாகமே.  கண்ணி வாசல் பணம் கொழிக்கும் வாழ்க்கை அமைக்கும்.  ஆக எந்த பக்கம் பார்த்த மனை என்பதில் நீங்கள் அதிக கவனம் எடுக்க வேண்டியதில்லை பின் எவற்றை கருத்தில் கொள்வது ? அது நிறைய இருக்கு அது என்ன என்ன என்று வரிசையாக சொல்றேன் :

1. இடம் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெற்ற இடமா ?

உங்களிடம் முகவர் ஒரு இடம் இருக்கு பார்க்குறீங்களான்னு கேட்ட உடனே நீங்க கேட்க வேண்டிய முதல் கேள்வியே இதுதான், இது ஓகேன்னாதான் அடுத்த பேச்சே.  குறைவா கிடைக்குதுன்னு அனுமதி இல்லாத இடத்தை வாங்கிட்டு அப்புறம் லோன் வாங்க முடியாம நீங்கதான் அவதிபடனும் பார்த்துகோங்க.  அனுமதி இல்லாத இடத்தில் வரைபட அனுமதி பெற முடியாது, வரைபட அனுமதி இல்லேன்னா லோன் வாங்க முடியாது.  கட்டுமான லோன் மட்டுமல்ல சொந்த காசுல வீடு கட்டிட்டு ஏதோ ஒரு சூழ்நிலைல வீட்ட அடமானம் வைத்து கடன் பெற வேண்டியிருந்தாலும் வரைபட அனுமதி இருந்தாத்தான் லோன் கிடைக்கும் பார்த்துகோங்க.  இது நகரத்திற்கு மட்டுமல்ல கிரமமா இருந்தாலும் இது பொருந்தும்.

2. இந்த இடத்தில் இதற்க்கு முன் குளம் அல்லது கிணறு எதாவது இருந்ததா?

ஆமாங்க இந்த இடம் இதற்க்கு முன் என்ன பயன்பாட்டுல இருந்துச்சுன்னு விசாரித்து தெரிந்து கொள்ளுங்க குளம் அல்லது கிணறு இருந்த இடமா இருந்தா அடுத்த இடம் பார்க்க ஆரம்பித்து விடுங்கள்.

3. இடம் உயரமான பகுதியில் உள்ளதா ?

உயரமான பகுதியா இருக்கான்னு பார்த்துக்கங்க அப்படியில்லன்னா நல்ல மழை பெய்தா அந்த ஏரியா தண்ணி எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள வந்துரும் அதுனால அதையும் பார்துடுங்க

4. கழிவு நீர் கடத்தும் வசதி உள்ளதா ?

ஒரு சில ஏரியால கழிவு நீர் கடத்தும் வசதியே இருக்காது அதாவது பிளாட் அமைந்த இடம் தாழ்வா இருக்கும் சுற்றி இருக்கும் இடங்கள் உயரமா இருக்கும் அப்ப நம்ம பிளாட் ஏரியாவ தாண்டி கழிவு நீர் கடத்த முடியாது அப்புறம் என்ன கழிவு நீர் நம்ம வீட்டை சிதறி தேங்கி கிடக்கும் டெங்கு மலேரியான்னு நாம போராட வேண்டி இருக்கும்.

5. அருகில் நீர் நிலைகள் ஏதாவது உள்ளதா?

அருகில் ஏதாவது குளம் இருக்கான்னு பார்க்கணும் இருந்தா நல்ல விஷயம் என்னன்னா நிலத்தடி நீர்மட்டம் பக்கத்துல இருக்கும், தண்ணீரும் நல்ல நீரா இருக்கும்.  அதே நேரம் அந்த குளம் அதிக மழையின் போது திறந்துவிடபட்டால் நமக்கு பாதிப்பு ஏற்ப்படுமான்னு பார்க்கணும்.

6. இந்த இடம் மனையிடமாக மாற்றுவதற்கு முன் இந்த இடத்தின் வழியாக ஓடை போன்ற நீர் வழித்தடங்கள் இருந்தனவா?

இதுவும் பாதிப்புதான் நீர் வழித்தடங்களை மறித்து வீடு கட்டினால் மழை காலங்களில் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

7. முக்கிய வீதியில் இருந்து இடத்திற்கான பாதை சரியாக உள்ளதா?

இப்போதெல்லாம் அடிக்கடி இந்த மாதிரி பிரச்சினைகளை கேட்க முடிகிறது பிளாட் போட்டு விற்பவர் ஏதாவது ஒரு இடத்தை காட்டி இதுதான் இந்த பிளாட்டுக்கு பாதை என கூறி விற்றுவிடுகிறார் பின்பு வீடுகள் நிறைய தோன்றும்போது பாதை என கூறியது அடுத்தவர் நிலம் என்பது தெரியவரும் கடைசியில் நமக்கு பாதையே இல்லை என்பது புரியும் அப்புறம் புலம்பி என்ன செய்ய…

8. நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவில் உள்ளது?

அக்கம் பக்கம் நல்லா கேளுங்கோ உங்க வீட்டுல போர் போடும்போது எத்தனை அடில தண்ணி வந்துச்சுன்னு.  தண்ணி எங்க வந்துச்சு வெறும் தூசுதான் வந்துச்சுன்னு சொன்னா திரும்பி பார்க்காம வந்துருங்க.

9. தரை மண் கழிமண்ணாக இல்லாமல் கெட்டி மண்ணாக உள்ளதா?

பக்கத்துல ஏதாவது வீடுகட்டிக்கிட்டு இருந்தாங்கன்னா அங்க கேளுங்க அஸ்திவாரம் தோண்டும்போது கீல கெட்டி தரையா இருந்துச்சா இல்ல களிமண்ணா இருந்துச்சான்னு. கெட்டி மண்ணு இல்லைனா உங்க அஸ்திவார செலவை கூட்டும். மழை காலங்களில் பிரச்சினை வரும்.

10. அவசர மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவை அருகில் எந்த நேரமும் கிடைக்குமா?

வீடுகட்டி குடிவந்த பிறகு தனிக்காட்டு ராஜாமாதிரி இருக்கதா நினைச்சிக்கிட்டு யாரும் இல்லாத இடத்தில் இருக்க கூடாது.  ஒரு ஆத்திர அவசரத்திர்க்கு பக்கத்துல ஆள் இருக்கணும்.  அதே மாதிரி முக்கிய தேவைகளான மருத்துவமனை அருகில் இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் அக்தியாவசிய பொருட்கள் சுலபமா கிடைக்கிதான்னு தெரிஞ்சுகிடனும்.

11. நம் அலுவலகங்கள் மற்றும் குழந்தைகளின் பள்ளிகள் அருகில் உள்ளதா?

3000 ரூபாய் வாடகையில் இருந்த வீட்டை விட்டுவிட்டு சொந்த வீடு கட்டுகிறேன் என்ற பேரில் ஊருக்கு கடைசியில் குறைந்த விலையில் கிடைத்த இடத்தை வாங்கி கடன உடன வாங்கி வீட்டை கட்டி குடிவந்துட்டு அங்க இருந்து ஆபீஸ் போறதுக்கும் பசங்க ஸ்கூல் போறதுக்கும் 5000 ரூபாய் செலவளிக்க கூடாது.  அதுனால பக்கமா இருக்க இடமா பாருங்க அதுதேன் நீண்ட நாள் செலவை குறைக்கும்.

12. அருகில் நிறைய வீடுகள் ஏற்கனேவே கட்டி குடிவந்து இருக்கிறார்களா?

பக்கதுல நிறைய வீடுகள் கட்டி குடிவந்து இருக்காங்களான்னு பாருங்க அப்படியே அவங்க கிட்ட இங்க என்ன என்ன குறை இருக்குன்னு கேளுங்க. இடம் வாங்கலாம்னு இருக்கேன்னு சொல்லிட்டு கேட்டா சிலபேர் யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்னு சூப்பரோ சூப்பர் அப்படின்னு சொல்லிவிட்டுருவாங்க.  சும்மா நான் நிர்வாக அலுவலகத்துல இருந்து வர்றேன் இங்க ஏதாவது குறை இருக்கான்னு கேளுங்க இருக்க எல்லா குறையையும் சொல்லிருவாங்க. :p

அவ்வளவுதாங்க இதை பார்த்தாலே போதும்.  இப்ப நான் சொன்னது எல்லாமே புதிய பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. ஒருவேளை அது வேறு ஒருவர் வாங்கி வைத்து இருந்த நிலமாக இருந்தால் இன்னும் சில விஷயங்களையும் ஆராய வேண்டும்.

  1. அவர் ஏன் இந்த மனையை விற்கிறார் ? அதாவது என்ன காரணத்திற்காக விற்கிறார் என்பதை கட்டாயம் விசாரிக்க வேண்டும்.  எதாவது பிரச்சினைகள் இருந்து நம்மிடம் தள்ளிவிட்டு சென்று விடக்கூடாது.
  2. வில்லங்கங்கள் ஏதும் உள்ளதா என்பதை நன்கு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் .
  3. வாரிசுதாரர்கள் அனைவரின் முன்நிலையில்  நிர்ணயிக்கப்பட்ட  விலை மற்றும் முன்தொகை விபரங்களை தெரிய படுத்திட வேண்டும்.
  4. பக்கத்து வீட்டுக்காரர்களின் எல்லை அளவுகளை அவர்களிடம் காட்டி தெளிவு படுத்தி கொள்ளவேண்டும்.
  5. ஒரு வேலை பொது சுவர்கள் ஏதும் இருப்பின் அதற்கான உடன்படிக்கை ஆவணங்களை கட்டாயம் கேட்டு வாங்க வேண்டும். அதை சம்பத்தப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரிடம் காட்டி உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
  6. குறைந்தது 30 வருடங்களுக்கான தாய் பாத்திரங்களை  கட்டாயம் கேட்டு வாங்கி கொள்ள வேண்டும்.
  7. ஏற்கனவே வீடு இருந்து அதை வாடகைக்கோ அல்லது ஒத்திக்கோ வீட்டு உரிமையாளர் விட்டு இருந்தால்  அவரை அவைகளிடம் பேசி அவர்கள் காலி செய்து கொடுக்க சம்மத பத்திரம் பெற வேண்டும்.

சரி ஒரு வழியா இடம்  வாங்கியாச்சு அடுத்தது …

உடனே பட்டா மாறுதல் செய்யுங்க, காலியிட வரி கட்டுங்க… உங்கள் உரிமையை நிலை நிறுத்துங்க.

ஏதாவது ஒரு சில விஷயங்கள் விட்டு இருந்தால் கீழே கமெண்டில் தெரிய படுத்துங்க சேர்த்துக்கிடுவோம் அனைவருக்கும் பயன் படும்.

அடுத்த அத்தியாயத்தில் கட்டுமான வேலை ஆரம்பிப்பதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி பார்ப்போம்.

சொந்த வீடு கட்டுரை பதிவுகள்  :

அத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

அத்தியாயம் 2 : காலி மனையிடம் வாங்கியபின் செய்ய வேண்டிய அத்தியாவசிய வேலைகள்

Comments
Loading...