My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

தமிழனின் பெருமை போற்றும் கட்டிடக்கலை

திருக்கோயில் கட்டுமானத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக மாடக்கோயில்களைச் சுட்டலாம்.

0 157

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தின் வரலாற்றில் முதல் வெளிச்சத்தைப் பாய்ச்சும் சங்க கால (கி.மு.300 – கிபி.250) இலக்கியங்களே தமிழகக் கட்டிடக் கலை வரலாற்றின் முதல் தரவுகளைக் கொண்டுள்ளன. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களின் வழி சங்க காலத்திலேயே செங்கல் (சுடுமண்), கற்கள் மற்றும் மரங்களினால் அமைக்கப்பட்ட அரண்மனைகள், மதில்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களையும் பல சாளரங்களையும் கொண்டிருந்த வீடுகள், சுதை பூசப்பட்ட சுவர்கள், தூண்கள், இடைக்கழிகள் (முற்றங்கள்), தட்டோடு வேந்த கூரைகள் முதலானவை இருந்ததை உணர முடிகிறது. இக்காலகட்டத்தில் கோயில்கள் எளிய செங்கல் மற்றும் மரக்கட்டுமானங்களாகத் திகழ்ந்தன. பொதியில், நகர், கடவுட்கோட்டம் என்று பல்வேறு பெயர்களால் சுட்டப்பட்டன.
சங்க காலத்தைத் தொடர்ந்து சங்கம் மருவிய காலத்திலும் (கி.பி. 250 – 400) களப்பிரர், முற்பல்லவர் காலத்திலும் (கி.பி. 400 – 580) வெவ்வேறு வகையான கட்டுமானங்களும் திருக்கோயில்களும் பல்கிப் பெருகின. சோழர் தலைநகரான புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்) சிவபெருமான், விஷ்ணு, பிரம்மன் முதலான பல்வேறு தெய்வங்கட்கும் அமைந்திருந்த திருக்கோயில்களைப் பட்டியலிடும் சிலப்பதிகாரம், கோட்டம் என்கிற பெயரில் ஐராவத யானை, சூரியன், கற்பகமரம் முதலானவற்றுக்கும் வழிபாட்டிடங்கள் அமைந்திருந்ததைச் சுட்டுகிறது. இக்காலத்தில் பௌத்த விஹாரைகளும் சைத்யங்களும் ஜைனப் பள்ளிகளும் பல இடங்களில் உருவாயின.
இக்காலகட்டத்தில் திருக்கோயில் கட்டுமானத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக மாடக்கோயில்களைச் சுட்டலாம். இவற்றை முன்னெடுத்தவர், சோழ மன்னரான கோச்செங்கட் சோழர் ஆவார். 63 நாயன்மார்களுள் ஒருவரான இவர், திருமாலுக்கும் பல்வேறு திருக்கோயில்களை எடுத்ததை பக்தி இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பின்னாளில் பல்வேறு கட்டுமான மாற்றங்களுக்கு உட்பட்டாலும் இம்மாடக்கோயில்கள் தமது அடிப்படை அமைப்பை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளன என்கிற வியத்தகு உண்மையை அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நுழைவாயில்கள் எதுவுமற்ற வெற்றுத் தளமொன்றை நிலத்தில் அமைத்து, அதன்மீது விமானம் எழுப்பி மேலேறிச் செல்ல படிகளைக் கொண்டுள்ள அமைப்பே மாடக்கோயில் எனும் வகைக் கட்டுமானமாகும்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பாண்டியர்களும் ஏழாம் நூற்றாண்டு முதல் பல்லவர்களும் இதரச் சிற்றரசர்களும் தத்தம் பகுதிகளில் அமைந்துள்ள மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். ஒரு பாறை அல்லது மலைச்சரிவில் உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து அதனை மெல்ல உட்புறமாக அகழ்ந்து அதனுள் மண்டபம், முன்றில், கருவறை, கோட்டங்கள் என்று பல்வேறு கட்டுமானங்களையும் செதுக்கி உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகளாகும். மிகுந்த உழைப்பையும் திறனையும் கோரும் இத்தகு கட்டுமானங்கள் எட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழப்பட்டன.
இவற்றுள் முதலாம் மகேந்திரவர்மரின் ஏழு பல்லவக் குடைவரைகள், பல்லவர் காலப் பெண்களால் செங்கல்பட்டு வல்லத்தில் அகழப்பட்ட குடைவரைகள், இராஜசிம்மரால் மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட சைவ-வைணவக் குடைவரைகள் மற்றும் தமிழகத்தின் தனிப்பெருந் தெய்வங்களுக்கு அமைக்கப்பட்ட ஒரே தளியான திருச்சி கீழ்க்குடைவரை, அதிய வேந்தரால் நாமக்கல்லில் அமைக்கப்பட்ட இருபெரும் விஷ்ணு குடைவரைகள், முத்தரையர்களின் திருமெய்யம் மற்றும் இதர புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், பாண்டிய மன்னர்களின் பல்வேறு குடைவரைகள் குறிப்பாக அளவிலும் அழகிலும் சிறந்து விளங்கும் திருப்பரங்குன்றம் குடைவரை  என்று பல திருக்கோயில்கள் குறிப்பிடத்தகுந்தவை.
இதற்கடுத்ததாக ஏற்பட்ட கட்டுமான வளர்ச்சி, எட்டாம் நூற்றாண்டின் இணையற்ற கலை வேந்தரான இராஜசிம்ம பல்லவரால் அமைக்கப்பட்ட ஒருகல் தளிகள் ஆகும். ஒரு பெரும் பாறையை நாற்புறங்களிலும் மேலிருந்து கீழாகச் செதுக்கிச் செதுக்கி அதனை ஒரு திருக்கோயில் வடிவமாக்கும் முறைமைக்கு, ‘ஒருகல் தளி’ என்று பெயர். மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் பஞ்ச பாண்டவ இரதங்கள், கணேச இரதம் மற்றும் வலையன் குட்டைத் தளிகள் இவ்வாறு உருவானவையே. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கங்களுடன் அமைக்கப்படும் ‘விமானம்’ என்கிற வகைக் கட்டுமானத்தைப் பின்பற்றி கல்லில் முதன்முதலில் அமைக்கப் பெற்றவை மாமல்லபுரத்தின் இந்த ஒருகல் தளிகளே. அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பலவேறு மர, செங்கல், சுதை மற்றும் உலோக விமானக் கோயில்களின் மாதிரிகளை கல்லில் பல்லவ உளிகள் இங்கே படம் பிடித்திருக்கின்றன.
பாண்டியர்களால் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் செதுக்கப்பட்ட ஒருகல் தளி கழுகுமலை வெட்டுவான் கோயில் ஒன்று மட்டுமே என்றாலும் அது ஒன்றே அவர்களின் நுண்ணிய திறமைகளை பறைசாற்றப் போதுமான சான்றாக நிற்கிறது. பல்லவ உளிகளுக்கு இணையாகப் பாண்டிய உளிகள் இங்கே பாறைகளில் போட்டியிடுகின்றன.
எட்டாம் நூற்றாண்டு முதல் கட்டுமானத் தளிகள் அல்லது கற்றளிகள் (கற்களை தனித்தனியே செதுக்கி, அவற்றை இணைத்து அடுக்கிக் கோயில் எழுப்பும் முறை) பிரபலமாயின. இதற்குப் பின்வந்த காலங்களில் எழுப்பப்பெற்ற அனைத்துக் கோயில்களும் விமான வடிவில் அமைந்த கற்றளிகளே. எதிலும் புதுமை தேடும் இராஜசிம்ம பல்லவர், தாம் எடுப்பித்த கற்றளிகளிலும் பல்வேறு விதங்களில் புதுமை காட்டியுள்ளார். விமானத்தின் கர்ணப் பத்தி எனும் பகுதியை முன்னிழுத்து, அதனை தனி அங்க ஆலயமாக்கிக் காட்டும் முறை அவரது பனைமலை தாளகிரீசுவரர் திருக்கோயிலில் முதன்முதலில் வெளிப்படுகிறது. தமிழகத்தின் முதல் சாந்தார விமானமாக எழும்பிய அவரது கனவுக் கற்றளியான காஞ்சி கைலாசநாதர் கோயில், கர்ண-சாலைப் பத்திகள் ஆகிய இரண்டையுமே முன்னிழுத்து அங்க ஆலயங்களாக்கிக் காட்டும் புதுமையை உள்ளடக்கியது.
இராஜசிம்மரின் வழிவந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவர் எடுப்பித்த முத்தள சாந்தாரத் திருக்கோயிலான காஞ்சி வைகுந்தப் பெருமாள் ஆலயம், திருமாலின் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களை முத்தளங்களிலும் தனிக்கருவறைகளில் இருத்தியமை குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் பல்லவ அரச பரம்பரையின் முழு வரலாறும் தொடர் சிற்பத் தொகுதியாகக் காணக்கிடைப்பது அதுவரை தமிழகம் காணாத புதுமை எனலாம்.
தமிழகக் கோயிற் கட்டிடக் கலையின் அடுத்தகட்ட வளர்ச்சி, பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சோழ நாட்டில் நிகழ்ந்தது.  பல்லவ-பாண்டிய திருக்கோயில்களின் கட்டுமானக் கூறுகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு வீறுடன் இக்காலத்தில் விழித்தெழும் சோழர் கலை, அப்போது நிலைகொண்டுவிட்ட விமான இலக்கணங்களைப் பெரிதும் மாற்றாமலே தனக்கென தனிப்பாணியை வகுத்துக்கொண்டமை கவனிக்கத்தக்கது.
இக்காலத்தில் அரசியல் எழுச்சியுற்ற முற்சோழ வேந்தர்களான முதலாம் ஆதித்த சோழரும் முதலாம் பராந்தகச் சோழரும் பாடல்பெற்ற செங்கல் தளிகள் பலவற்றையும் கற்றளிகளாக மாற்ற முனைந்தனர். திருச்சோற்றுத்துறை ஓதவனேசுவரர், திருவேதிக்குடி ஆபத்சகாயேஸ்வரர், திருப்பழனம் பழமநாதர், புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர், கும்பகோணம் நாகேஸ்வரர் என்று வரிசையாகப் பல்வேறு முற்சோழர் திருக்கோயில்கள் இக்காலக் கலை வளர்ச்சியை அறிய உதவும் முக்கிய சான்றுகளாம்.
இவற்றுள் குடந்தை நாகேஸ்வரர் திருக்கோயிலும் புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயிலும் கலைப்பெட்டகங்கள் என்று சொல்லுமளவிற்குப் பல்வேறு சிற்ப-கட்டுமான நுட்பங்களை உள்ளடக்கியவை. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ வேந்தர் உத்தமச் சோழரின் அன்னையரான செம்பியன் மாதேவியார், எண்ணற்ற சோழக் கற்றளிகள் உருவாகக் காரணியானார். இக்காலத்தைய கோயில்களில் ஆதிதளக் கோட்டங்களின் எண்ணிக்கை அதிகமாகின்றன. சோழர் கலைப்பாணிக்கே குறியீடாக விளங்கும் ஆடவல்லார் (நடராஜர்) பிரபலமாவது இந்தக் காலத்தில்தான்.
பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப் பெருவேந்தர் இராஜராஜரால் பிரம்மாண்டமான தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் எழுப்பப்பெற்றது. உயர்ந்ததோர் உபபீடத்தின் மீது பதினான்கு தள தூய நாகர வகையினதாக எழும் இக்கோயில் சாந்தார விமானம், நாற்புறங்களிலும் திறப்புக்கள் பெற்ற முதல் சர்வதோபத்ர விமானமுமாகும். தமிழகத்தின் கட்டுமானப் பொறியியலின் உச்சமாக இக்கோயிலின் இருதள சாந்தார நாழியமைப்பைக் குறிப்பிடலாம்.
இராஜராஜரின் புதல்வரான இராஜேந்திர சோழரால் கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுப்பப்பெற்ற கங்கை கொண்ட சோழீச்சுரம் நாகர-வேசர- திராவிடக் கூறுகள் ஆகிய மூன்றையும் வியக்கத்தக்க வகையில் உள்ளடக்கிய எட்டு தளங்கள் கொண்ட கலப்பு விமானமாகும். இத்தகைய முக்கூறுகள் கொண்ட கலப்பு விமானம் தமிழகத்தில் இது ஒன்று மட்டுமே.பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழவேந்தர் இரண்டாம் இராஜராஜரால் எழுப்பப்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் ஐந்தள நாகர விமானமாகும். நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இக்கோயிலின் உப பீடத்தில் சைவ நாயன்மார்களின் கதைகள் தொடர் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.சோழர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிற்காலப் பாண்டியர் மதுரையில் எழுச்சி பெற்றனர். இக்காலத்தின் தலைசிறந்த கட்டுமானங்களாக மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலின் கோபுரங்களைச் சுட்டலாம்.
இதற்குப் பின்வந்த விஜயநகர- நாயக்க வேந்தர்களின் காலத்தில் தமிழகத்தின் பல திருக்கோயில்கள் பல்வேறு மண்டபங்கள், சிற்றாலயங்கள், கோபுரங்கள் பெற்றுப் பேராலயங்களாக உருமாறின. அழிவிற்கு உட்பட்டிருந்த பல ஆலயங்கள் புத்துயிர் பெற்றன. திருவரங்கம் அரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சி திருக்கோயில் என்று பல திருக்கோயில்களின் மண்டபங்களும் கோபுரங்களும் இன்றுவரை நாயக்க மன்னர் கால சிற்ப-கட்டுமான நுட்பத்தைப் பறைசாற்றி நிற்கின்றன.
Comments
Loading...