My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

மாடித்தோட்டம் அமைப்பதில் சில சந்தேகங்கள்

Some questions about roof garden

0 173

Get real time updates directly on you device, subscribe now.

வீடுகளில் தோட்டம் அமைப்பது தொடர்பாக எழும் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சாம்பசிவம்

‘‘வீட்டுத்தோட்டம் அல்லது மொட்டைமாடித் தோட்டத்தில் எல்லா வகை யான செடிகளையும் வளர்க்கலாமா?’’

‘‘மலர்கள், காய்கறிகள், அலங்காரச் செடிகள், இங்கிலீஷ் காய்கறிகள், கீரை வகைகள் என, மரப்பயிர் அல்லாத செடிகள் அனைத்தையும் வீட்டில் அல்லது மொட்டைமாடியில் வளர்க்கலாம்.’’

‘‘தோட்டம் அமைக்கத் தேவையான செடிகள் மற்றும் விதைகளை எங்கே வாங்குவது? வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?’’

‘‘அரசு மூலமாக ஒரு சதவிகிதம்தான் விதைகள் விநியோகிக்கப்படுகின்றன. மற்றபடி தனியார் நிறுவனங்கள் தான் அதிகப்படியான விதைகள் மற்றும் நாற்றுகளை சப்ளை செய்கிறார்கள். அவர்களிடம் அதிக அளவில் விதைகள் வாங்கும்போது, விதைச்சான்று துறையின் அங்கீகாரம் பொருந்திய சீல் இருக்கிறதா என்று பார்க்கவும். வீட்டுத்தோட்டத்துக்கு 50 கிராம் அல்லது 100 கிராம் பாக்கெட்டுகள் என குறைந்த அளவில் விதைகள் வாங்கும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சீல் இருக்காது என்றாலும், பேக் செய்யப்பட்ட தேதி மற்றும் எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்கவும். நாற்று வாங்கும்போது அந்தச் செடி செழிப்பான, சீரான வளர்ச்சியில் இருக்கிறதா என்று கவனித்து வாங்கவும்.’’

‘‘செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற தொட்டிகள் எவை? தொட்டிகளில் என்ன மாதிரியான மண்ணைப் பயன் படுத்த வேண்டும்?’’

‘‘மண் தொட்டிகள்தான் என்றில்லை, வீடுகளில் பயனற்றுக் கிடக்கும் பிளாஸ்டிக் பக்கெட், டிரம், குடம் என்று எல்லாவற்றிலும் கீழ்ப்பகுதியில் ஒரு துளை போட்டு, மண் நிரப்பி செடி வளர்க்கலாம். மண்ணைப் பொறுத்தவரை, தோட்டங்களில் இருக்கும் வண்டல் மண் சிறந்தது. கிடைக்கவில்லை எனில், எரு, செம்மண், மணல் மூன்றையும் கலந்து தொட்டியில் நிரப்பலாம்.’’

‘‘பூச்சித்தாக்குதலை எப்படித் தடுப்பது?’’

‘‘இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துத் தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சித் தாக்குதல் ஏற்படாது.’’

‘‘செடியின் இலை, தண்டுகளில் வெள்ளையாக பூத்துவிடுகிறதே..?’’

‘‘இதனை மாவுப்பூச்சி என்பார்கள். ஆரம்ப கட்டம் என்றால், தண்ணீரை தெளித்தாலே போதும். அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது என்றால், வேப்பெண்ணெயுடன் சிறிதளவு காதி சோப்புக் கரைசலைக் கலந்து தெளித்தால் இது போய்விடும். மிகவும் அதிகமாகிவிட்டால், இஞ்சி, பூண்டு, இரண்டையும் மிக்ஸியில் அரைத்துத் தயிரில் கலந்து தெளித்தால் மட்டுப்படும்.’’

‘‘தரையில் வளரும் செடிகளைப் போல தொட்டிச் செடிகள் அத்தனை செழிப்பாக வளர்வதில்லையே… ஏன்?’’

‘‘தரையில் செடியின் வேர்ப்பகுதி நன்றாகப் பரவ இடமிருக்கும். அதுவே தொட்டியில் குறிப்பிட்ட தூரம் வரை வளரும் வேர், பின்னர் இடத்துக்கு ஏற்ப சுருங்கிக்கொள்வதால், வளர்ச்சியில் தாமதம் இருக்கத்தான் செய்யும்.’’

‘‘செடிகளை நடுவது அல்லது விதைகளை விதைப்பதற்கான முறைகள் குறித்து விளக்கம் ப்ளீஸ்…’’

‘‘விதைகளாக விதைப்பதைவிட, நாற்றுகளாக நட்டு வளர்ப்பது சிறந்தது. காரணம், பெரும்பாலும் விதைகளில் 85%தான் முளைக்கும். வெளியில் நாற்று வாங்குவதைவிட, விதைகள் வாங்கி விதைத்து, 25 முதல் 30 நாட்களில் அது நடவுக்கு ஏற்ற நாற்றானதும், வேறு தொட்டியில் மாற்றி வளர்க்கலாம். நாற்று வளர்த்த தொட்டியை, பிற நாற்றுகள் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’’

‘‘வெளியூர் செல்லும் நாட்களில் செடிகளை எப்படிப் பராமரிப்பது?’’

‘‘செடியின் மேற்புறத்தில் தேங்காய் நார்க் கழிவுகளை போட்டு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றால், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஈரப்பதம் இருந்து கொண்டேயிருக்கும். நன்கு வளர்ந்த செடி என்றால், நன்றாக தாங்கும்.’’

‘‘ஒரே தொட்டியில் இரண்டு செடிகள் வளர்க்கலாமா?’’

‘‘ஒரே தொட்டியில் இரண்டு வெவ்வேறு வகைச் செடிகளை வளர்க்கக் கூடாது. ஒரே செடியின் நாற்றை, தொட்டி பெரிதாக இருக்கும் பட்சத்தில் இரண்டு வீதம் வைத்து வளர்க்கலாம்.’’

‘‘மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கும் போது செடியின் வேர் தரையில் ஊடுருவுமா?’’

‘‘ஊடுருவாது. பாலித்தீன் கவர்களில் செடிகளை வைத்திருக்கிறீர்கள் என்றால் செடி வளர வளர வேர் கவரை கிழித்துக் கொண்டு வெளியே வரும். அது போன்ற சமயங்களில் வேறு பெரிய கவர் அல்லது தொட்டியில் செடியை மாற்றிக்கொள்ளலாம். என்றாலும் அவ்வப்போது கண்காணிப்பதும் நல்லது.”

Comments
Loading...