My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

மனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ? ஆனால் அபராதம் உண்டு ! ..

layout approval date extended with fine

0 703

Get real time updates directly on you device, subscribe now.

மனை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்காதவர்களுக்கு 50 சதவிகிதம்வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இது இன்றைய தினமலர் நாளிதழ் செய்தி.

அதன் முழு விபரம் :

மனை வரன்முறை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு, வரன்முறை கட்டணத்தில், 50 சதவீதத்தை அபராதமாக விதிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைகளுக்கான வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது.இதில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நவ., 3ல் முடிந்தது. பின், அரசு வழங்கிய ஐந்து நாள் அவகாசம், நவ., 16ல் முடிவடைந்தது.இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பிக்காத மனைகள் குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர், கிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, வரன்முறைக்கு விண்ணப்பிக்காத மனைகளின் உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கணிசமான எண்ணிக்கையில், இன்னும் மனைகள் வரன்முறை திட்டத்தில் வராமல் உள்ளன. எனவே, விடுபட்டோரை, தாமதமானவர்கள் என்ற அடிப்படையில், இணைய தளத்தில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும்.இதற்காக, வரன்முறை கட்டணத்தில், 50 சதவீத தொகையை அபராதமாக விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, நவ., 3க்கு பின், ஆறு மாதம் வரை தாமதமாக விண்ணப்பிப்போருக்கு, வரன்முறை கட்டணத்தில், 10 சதவீதம்; ஓராண்டு வரை, 25 சதவீதம்; ஓராண்டுக்கு மேல், 50 சதவீதம் தொகையை, அபராதமாக விதிக்கலாம்.அதற்கேற்ப, வரன்முறை விதிகளில் திருத்தங்கள் செய்ய, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில், ச.மீ.,க்கு, 15 ரூபாய்; நகராட்சிகளில், 30 ரூபாய்; மாநகராட்சிகளில், 50 ரூபாயும் அதிகபட்ச அபராதமாக இருக்கும். அரசின் ஒப்புதலுக்கு பின், இது தொடர்பான உத்தரவு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார். – தினமலர் – 19.11.18

மனை வரன்முறை என்றால் என்ன ? இது அவசியமா? இந்த வரன்முறை செய்யாவிட்டால் என்ன பாதிப்பு ? இந்த கேள்விகள் இப்போது எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கின்றன அல்லவா அதை கொஞ்சம் விளக்கமா பார்த்திருவோமா.

 

ஏற்கனவே நாம் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018  என்ற பதிவில் விரிவாக பார்த்தோம், இந்த பதிவில் வரன்முறை கட்டணம் பற்றியும் வரன்முறை பற்றியும் தெளிவாக பதிவிட்டிருந்தோம்.  வரன்முறை செய்யாவிட்டால் பாதிப்புகள் என்ன என்பதை இப்போது  பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு லேஅவுட் பிளாட்கள்  அமைப்பதற்கு முதலில் அந்த இடம் விவசாய நிலமாக இருக்க கூடாது.  அந்த இடம் எதற்கும் பயன்படாத நிலமாக இருக்க வேண்டும், நீர் நிலைகள் இருந்த இடமாக இருக்க கூடாது, நீர் வழித்தடங்களை பாதிக்கும் வகையிலும் இருக்க கூடாது, நீர் பிடிப்பு பகுதியாக இருக்க கூடாது.  இவ்வாறு உள்ள இடத்தை முதலில் உள்ளூர் நிர்வாகத்தின் கூட்டத்தில் வைத்து தடையில்லா சான்று வாங்க வேண்டும் (NOC), அதாவது இந்த இடம் விவசாயத்துக்கு உகந்தது இல்லை, இந்த இடம் எந்த நீர் நிலைகளையும் பாதிக்கவில்லை, இந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என சான்று வாங்க வேண்டும்.

அதன்பின் அதனை உள்ளூர் திட்ட குழுமத்திற்கு விண்ணப்பம் செய்து நிலத்தின் பயன்பாட்டை மாற்ற வேண்டும்.  அதாவது விவசாய இடம் என்பதில் இருந்து குடியிருப்பு இடமாக வேண்டும்.  அதன்பின் லேஅவுட் பிளான் அமைத்து திரும்பவும் உள்ளூர் திட்ட குழுமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கு அவர்கள் நமது விண்ணப்பத்தை ஆராய்ந்து அதில் பொது இடங்களுக்கு தேவையான இடத்தை ஒதுக்கி, ரோடு வசதிகளை வடிவமைத்து லேஅவுட் அமைத்து கொடுப்பர்.  நாம் அதை பெற்றுக்கொண்டு அதன்படி நிலத்தை லேஅவுட்களாக பிரித்து ரோடு அமைத்து, கழிவு நீர் வடிகால்கள் அமைத்துவிட்டு ரோட்டுக்கான இடங்களை உள்ளூர் நிர்வாகத்திற்கு எழுதி கொடுத்த பின்  மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு பின் DTCP அனுமதி அளிப்பர் அதன்பின் தான் நாம் ப்ளாட்களை விற்க முடியும்.

வரன்முறைபடுத்ததாத மனை என்பது இந்த செயல்கள் எதுவம் செய்யாமல் நேரடியாக விவசாய இடத்தை பிளாட்களாக பிரித்து விற்பனை செய்யப்பட்ட இடம்.

இதில் ஏற்படும் விதிமீறல்கள் மற்றும் பாதிப்புகள் என்ன வென்றால்,

முதலில் விவசாய இடம் பாதிக்க படுகிறது, நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படுகிறது, முறையான அளவில் பிளாட்கள் அமைக்கப்படுவதில்லை, தேவையான குறைந்த அளவுகூட ரோடுகள் அமைப்பதில்லை, பொது இடங்களுக்கு இடம் ஒதுக்குவதில்லை, கழிவுநீர் ஓடைகள் அமைப்பதில்லை, முக்கியமாக ரோடுகளை அதாவது ரோடுகளுக்கான இடங்களை உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில்லை.  பாதைகளை அரசுக்கு கொடுத்தால்தானே பின் அவற்றை அரசு மேம்படுத்த முடியும், கழிவு நீர் ஓடைகள் அமைக்க முடியும்.

சம்பந்தப்பட்ட  பதிவு :வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை !

இப்படி குறைகள் நிறைந்த இடத்தை முறைப்படுத்தவே அரசு வாய்ப்பு அளித்துள்ளது.  நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் புரோமோட்டர் அரசுக்கு காட்டாமல் விட்ட தொகையையே அரசு வரன்முறை கட்டணமாக  கேட்கிறது.

இந்த வரன்முறையின் நன்மைகள் என்ன ? (இது தெரியாமல் நாங்கள் எப்படி சம்மதிப்போம்)

நீங்கள் இந்த வரன்முறை செய்து கொண்டால் உங்கள் கனவு இல்லம் கட்ட அனுமதி பற்று கொள்ளலாம்.  கட்டிட அனுமதி பெற்று கட்டினால்  மட்டுமே லோன் பெற முடியும்.  கட்டுமான கடன் மட்டுமல்ல அடமான கடன் பெற வேண்டும் என்றாலும் கூட கட்டிட அனுமதி இருந்தால் மட்டுமே வீட்டை மதிப்புக்கு எடுத்து கொள்வர் அனுமதி இல்லை என்றால் 10 மாடிவீடாக இருந்தாலும் அது வெறும் தரையே.

உங்கள் வீட்டுக்கு ரோடு வசதி கிடைக்கும், குடிநீர் வசதி கிடைக்கும், பாதாள சாக்கடை வசதி கிடைக்கும், (பாதாள சாக்கடை வந்தால்தான் வீட்டின் முன் டெங்கு கொசு பரவாமல் தடுக்க முடியும்).

தெரு லைட்கள் கிடைக்கும்.  இன்னும் என்ன வசதிகள் உங்கள் நகர நிர்வாகத்தால் செய்யப்படுமோ அவைகள் தடையில்லாமல் கிடைக்கும்.

இது நகரத்திற்கு மட்டுமல்ல கிராமங்களுக்கும் பொருந்தும்.

எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வரன்முறையற்ற மனைகளை ஆறு மாதத்திற்குள் வரன்முறை செய்து கொள்ளுங்கள்.

என்னுடைய மனை வரன்முறை செய்யப்பட்டதா இல்லையா என எவ்வாறு தெரிந்து கொள்வது.  உங்கள் லேஅவுட்டில் DTCP நம்பர் என அனுமதி எண் உள்ளதா என பாருங்கள் இருந்தால் உங்கள் மனைப்பிரிவு அனுமதி பெற்றது. இல்லை என்றால் அனுமதி பெறவில்லை என்று அர்த்தம்.  சந்தேகம் இருந்தால் உங்கள் நகராட்சியில் உள்ள கட்டிட அனுமதி பிரிவு அதிகாரிகளை அணுகி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Comments
Loading...