My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018

last date of Regularization of unapproved plots and layout 03.11.18

0 1,324

Get real time updates directly on you device, subscribe now.

அனுமதியற்ற அதாவது வரன்முறை படுத்தப்படாத பிளாட்டுகளை வரன்முறை படுத்த வரும் 03.11.2018 கடைசி நாள்.  ஏற்கனவே 6 மாதத்திலிருந்து 1 வருட மாகவும் பின் அது 18 மாதங்களாகவும் நீடிக்க பட்டுள்ளது. மேலும் நீட்டிப்பு சந்தேகம்தான்.  அதனால் விரைந்து உங்கள் மனையை வரன்முறை செய்ய பதியுங்கள். அதற்கான வெப்சைட் http://www.tnlayoutreg.in/

 

இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் :

 

அரசு விளைநிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்றப்படுத்துவதை தடுக்கவும் முறையற்ற முறையில் வீட்டடிமனைகள் பிரிக்கப்படுவதையும் மற்றும் விற்கப்படுவதையும் தடுக்க 20.10.2016 முதல் வரன்முறை படுத்தப்படாத பிளாட்டுகளின் பத்திர பதிவை நிறுத்தியது.  

 

முறையாக DTCP அனுமதி பெறாத எந்த மனையிடத்தையும் பத்திரப்பதிவு செய்ய கூடாது என உத்தரவுவிடப்பட்டுள்ளது.  அப்படி விற்றாலும் அதன் தாய் பத்திரத்தில் என்ன வகையாக உள்ளதோ அப்படியே பதியப்படும் அதாவது தோட்டம், விவசாய நிலம் என்று இருந்தால் அப்படியேதான் பதிய முடியும் வீட்டடி மனையிடம் என பதிய முடியாது.

 

இதனால் ரியல் எஸ்டேட் துறை ஸ்தம்பித்தது.  அரசு செய்த சிறந்த வேலையும் அது. அவ்வாறு கடிவாளம் போடாவிட்டால் விவசாய நிலங்கள் காலியாகிவிடும்.  

 

இதற்க்கு பலரும் போர்க்கொடி தூக்கினர்.  அதில் ஏற்கனேவே 20.10.2016க்கு முன் இவ்வாறு அனுமதி பெறாத இடம் வாங்கியோர் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியானது ? ஏனென்றால் அவர்களும் இடத்தை விற்கவோ கட்டிடம் கட்டவோ முடியாது.

 

அரசு 04.05.2017ல் அதற்கான ஒரு வரன்முறை சட்டம்  கொண்டு வந்தது அதுவே “Tamil Nadu Regularisation of Unapproved Layouts and Plots Rules, 2017” அதாவது “தமிழ்நாடு அனுமதி பெறாத மனைபிரிவு  மற்றும் மனைகளின் வரன்முறை சட்டம் 2017” இதன்படி அறிவிக்க பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இதில் கூறப்பட்ட விதிகளின் படி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களின் மனைப்பிரிவை அல்லது மனையை அனுமதிபெற்றவையாக மாற்றிக்கொள்ளலாம்.

பின் அந்த கால கேடு 1 வருடமாகவும் அதன்பின் திரும்பவும் 18 மா தங்களாகவும் நீட்டிக்கப்பட்டு தற்போது முடிவு தேதி 03.11.2018 ஆக  உள்ளது.

யாருக்கு விண்ணப்பிப்பது ?

 

ஒரு லேஅவுட்டில் உள்ள  தனி மனையிடம் என்றால்

 

 1. நகராட்சி என்றால் ஆணையாளர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 2. டவுன் பஞ்சாயத்து என்றால் நிர்வாக அதிகாரி   
 3. கிராம பஞ்சாயத்து என்றால் வட்டார வளர்ச்சி அதிகாரி

 

ஆகியோர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். http://www.tnlayoutreg.in/

மொத்த லேஅவுட் ஆக இருந்தால் :

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதி என்றால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority) யிலும்

 

மற்ற பகுதிகள் என்றால் அப்பகுதிக்கு உட்பட்ட உள்ளூர் திட்ட குழுமத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க தகுதியான இடத்தின் காலவரையறை என்ன ?

 

2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதிக்குள் லேஅவுட் முழுவதுமாகவோ அல்லது சில பிளாட்டுகளாவது விற்க பட்டிருக்க வேண்டும்.  தனி மனையிடத்தையும் பதியலாம் அவ்விடம் மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன் வாங்கியிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் அவர் பெயரில் கிரையம் வாங்கி இருக்க வேண்டும்.  பவர் வாங்கியிருந்தால் அது விண்ணப்பிக்க தகுதியில்லை.

 

வரன்முறைகள் :

 

 1. விண்ணப்பிக்கும் இடம் முழுவதுமாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ பொது நீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.  அதாவது ஓடை, குளம், ஆறு இவைகளை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது.
 2. நிலம் முழுவதுமா அல்லது பகுதியோ அரசின் புறம்போக்கு நிலமாக இருக்க கூடாது.
 3. விளையாட்டு அல்லது பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடமாக இருக்க கூடாது
 4. காலியிடம் மற்ற இடங்களுக்கு செல்லும் பாதைகளை அடைக்கும் விதத்தில் இருக்க கூடாது.
 5. நிலத்தின் பகுதியோ அல்லது முழுவதுமோ ரோடு அல்லது இரயில் பாதையை இடையூறு செய்யும் படி இருக்க கூடாது.
 6. ஆக்கிரமிப்பு செய்யும்படி இருக்கும் இருக்க கூடாது
 7. நிலத்தின் மேல் உயரழுத்த மின்சாரம் செல்ல கூடாது

 

தேவையான ஆவணங்கள் :

 

 1. நிலத்தின் பாத்திரம் நகல்
 2. நிலத்தின் லேஅவுட் வரைபடம்
 3. ஆதார் கார்டு
 4. வில்லங்க சான்று
 5. உறுதிமொழி பாத்திரம் (Form 3)

 

கட்டணங்கள் :

கட்டணங்கள் மூன்று விதமாக பெறப்படுகிறது அவை விண்ணப்ப கட்டணம், வரன்முறை கட்டணம், வளர்ச்சி கட்டணம்.  இம்மூன்றும் நாம் கட்ட வேண்டும்.

 

விண்ணப்ப கட்டணம் (Scrutniy Charge) = 500/-

 

வரன்முறை கட்டணம் :

வரன்முறை கட்டணம் இடத்தின் பரப்பளவில் ஒரு சதுரமீட்டருக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி பகுதி என்றால் = 100/-

நகராட்சி என்றால் = 60/-

டவுன் பஞ்சாயத்து அல்லது கிராமம் என்றால் = 30/-

 

வளர்ச்சி கட்டணம் :

வளர்ச்சி கட்டணம் இடத்தின் பரப்பளவில் ஒரு சதுரமீட்டருக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி பகுதி என்றால் = 500/-

சிறப்பு நிலை அல்லது தேர்வு நிலை  நகராட்சி என்றால் = 250/-

முதல் நிலை, இரண்டாம் நிலை நகராட்சி என்றால் = 150/-

டவுன் பஞ்சாயத்து என்றால் = 75/-

கிராமம் என்றால் = 25/-

 

அதாவது காலிமனையிடம்  100 சதுர மீட்டர் பரப்பளவு என்றால்

மாநகராட்சி பகுதி என்றால் = 500/- + (100*100) +(100 *500) = 60500/-

சிறப்பு நிலை அல்லது தேர்வு நிலை  நகராட்சி என்றால் = 500/- + (100*60) +(100 *250) = 31500/-

 

முதல் நிலை, இரண்டாம் நிலை நகராட்சி என்றால் =  500/- + (100*60) +(100 *150) = 21500/-

 

டவுன் பஞ்சாயத்து என்றால் =  500/- + (100*30) +(100 *75) = 11000/

 

கிராமம் என்றால் =  500/- + (100*30) +(100 *25) = 6000/-

 

வரை கட்டணம் ஆகும்.

 

கடைசி நாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சீக்கிரம் பதிவினை செய்து உங்கள் இடத்தினை வரன்முறை செய்து அனுமதிக்கபட்ட இடமாக மாற்றி கொள்ளுங்கள்.

 

இல்லையென்றால் நீங்கள் உங்கள் அனுமதியில்லாத இடத்தில் கட்டிடம் கட்ட முடியாது, லோன் பெற முடியாது ஏன் நீங்கள் மனையிடமாக விற்பனைக்கூட செய்ய முடியாது.  இது ஒரு முக்கியமான விஷயம் மறந்து விடாதீர்கள். அலட்சியம் செய்தும் விடாதீர்கள்.

 

கடைசி நாள் : 03.11.2018

 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : http://www.tnlayoutreg.in/

 

சம்பந்தப்பட்ட அரசு உத்தரவுகள் :

G.O.MS.No.78 dated 04.05.2017

G.O.MS.No.172 dated 13.10.2017

G.O.MS.No.55 dated 02.05.2018

 

Comments
Loading...