My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

பில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கும் விபரம்

Important of soil test of every construction

0 128

Get real time updates directly on you device, subscribe now.

பில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு … 

கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். கட்டிடத்தின் தாங்கு திறனை அஸ்திவாரமே உறுதி செய்கின்றன. ஆகையால் அஸ்திவாரம் ஆழமாக அமைக்கப்பட வேண்டும். அது அந்த பகுதியின் மண்ணின் தன்மையை பொறுத்து அமைய வேண்டும். ஏனெனில் மண்ணின் தாங்குதிறனை பொறுத்தே கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். மண்ணின் தாங்குதிறன் கேள்விக்குறியானால் அது அஸ்திவாரத்தை பாதிக்கும். அதனால் கட்டிடத்தின்  பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே மண்ணின் தாங்கு           திறனை உறுதி செய்ய மண் பரிசோதனை மிக அவசியம். அதன் மூலமே கட்டிடம் அமைக்கப்             படும்  இடத்தில் உள்ள மண்ணின் தன்மையை கண்டறிந்து அதற்கு ஏற்பவே வலுவான அஸ்திவாரம் கொண்ட கட்டிடத்தை எழுப்ப முடியும். அதற்கு செய்ய வேண்டிய முக்கிய  விஷயங்களை பார்ப்போம்.

இந்த விபரமும் உங்களுக்கு தேவைப்படலாம் :மழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா ?

இயற்கை பேரிடர் தாங்கும் படி அமைக்க வேண்டும் :

* எந்தவகை கட்டிடங்களை கட்டுவதாக இருந்தாலும் இயற்கை பேரிடர் கால பாதிப்புகளை தாங்கும் வகையிலான அடித்தளங்களை அமைக்க வேண்டும். அதற்கு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அந்த இடத்திலுள்ள மண்ணின் தன்மையை ஆராய வேண்டும். அந்த மண் எந்த வகையை சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அது கட்டிட அஸ்திவாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் மண் ரகத்தை சார்ந்ததா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அதற்கு கட்டப்படும் இடத்தில் எந்த வகையான மண் இருக்கிறது என்பதை பரிசோதிக்க வேண்டும். மண்ணுக்குள் சில மீட்டர் தூரம் வரை துளையிட்டு என்னென்ன மண் வகைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

* மண்ணின் மேல் மட்டத்தில் ஒருவகை மண்ணும், உள்புறத்தில் வேறு வகை மண் ரகமும் இருக்கலாம். அந்த இடம் பள்ளமாக இருந்திருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம். இடத்தை உயர்த்துவதற்காக மேல்மட்டத்தில் மண்ணை நிரப்பி இருக்கலாம். அப்படிப்பட்ட இடத்துக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேல் மட்ட மண் எத்தனை அடி தூரத்துக்கு இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். அது மண்ணோடு கலந்து உறுதி தன்மை பெற்று இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அந்த மண்ணின் தாங்கு திறன் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து அந்த மண் இருக்கும் ஆழத்தை  தவிர்த்து அஸ்திவாரத்துக்கு தோண்டும் ஆழத்தை கணக்கில் எடுத்து கொள்வது நல்லது. ஏனெனில் பள்ளத்தில் இருந்த இடத்தை உயர்த்துவதற்கு பல வகையான  மண்களை பயன்படுத்தி இருக்கலாம். அவை பல பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு இருக்கலாம். அப்படி இருந்தால் ஒருவகை மண், மற்ற வகை மண் கலவையுடன் கலந்து உறுதி தன்மை பெறாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.

இந்த விபரமும் உங்களுக்கு தேவைப்படலாம் : நிலம் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சிறு கட்டுமானம் என்றாலும் மண் பரிசோதனை அவசியம்.

* சாதாரண வீடு கட்டுவதாக இருந்தாலும் மண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அதிலும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதாக இருந்தால் மண் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மண்ணின் தாங்கு திறனை பரிசோதித்து அதற்கு ஏற்ப ஆழமான அஸ்திவாரத்தை அமைத்து விட வேண்டும். அந்த மண் எவ்வளவு பாரத்தை தாங்கும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். அது தாங்கும் திறன் அளவுக்கு தான் கட்டிடத்தின் உயரத்தை எழுப்ப வேண்டும்.

* கட்டிடம் கட்டும் இடம் விவசாய நிலமாக இருந்து குடியிருப்பு இடமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். அத்தகைய இடத்தில் இருக்கும் மண் எந்த வகையை சார்ந்தது என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மண் ரகம் கட்டிடம் கட்டுவதற்கு தகுதி வாய்ந்ததா? என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயத்துக்கு தக்கபடி ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டதாக இருந்தால் மழைக்காலங்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மண்ணின் தன்மையை அறிந்து அதன் தாங்குதிறனுக்கு ஏற்ப அஸ்திவாரத்தை  வலுப்     படுத்தி விட வேண்டும்.

* கட்டிடம் அமையும் இடம் அருகில் நீர்நிலைகள் எதுவும் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அதற்கு ஏற்ப மண் பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும். மண்ணின் தாங்கு திறனை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப ஆழமான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும். கான்கிரீட் கலவைகளும் அஸ்திவாரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையில் வலுவாக அமைய வேண்டும். மண்ணின் தன்மை அறிந்து அதற்கு ஏற்ப கட்டுமானமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக கட்டிடங்கள் வலுவாக நிற்கும் வகையில் மண் இருக்கிறதா என்பதை பரிசோதித்த பிறகே இறுதி முடிவுக்கு வர வேண்டும். வீடு வாங்குபவர்களும் அந்த இடம்   எந்த மாதிரியான மண் தன்மை கொண்டது என்பதை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலும் உங்களுக்கு உதவலாம் :வீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

Comments
Loading...