My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

வீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா ? எப்படி வாங்குவது ?

For a house construction Plan approval is must or not ?

0 309

Get real time updates directly on you device, subscribe now.

என்னதான் அடுக்குமாடி வீடுகள் புற்றீசல்கள்போல பெருகினாலும், தனி வீட்டுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். சின்னதாக ஒரு இடம் வாங்கி, அதில் விருப்பப்படி வீடு கட்டிக் கொண்டு குடிபுகுவது அலாதியானதுதான்.

வீடு கட்ட நிலம் வாங்கிவிட்டோம். அடுத்தது என்ன வீட்டைக் கட்டத் தொடங்கிவிடலாம்தானே? வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாக இருந்தாலும் உள்ளே பல்வேறு வழிமுறைகளைக் கொண்டது, வீடு கட்டும் திட்டம். வீடு கட்டுவதற்கு முன்பு, கட்டுமானத்துக்கான அனுமதி வாங்குவது அதன் வழிமுறைகளில் ஒன்று. தமிழகத்தில் கட்டுமானம் கட்டுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரைத் தலைநகரான சென்னையில் கட்டிடம் கட்ட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் (சிஎம்டிஏ) அனுமதி அவசியம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கட்டிடம் கட்டுவதற்கு பஞ்சாயத்து, உள்ளூர்திட்டக் குழுமம் (LPA), நகர்ஊரமைப்பு இயக்கம் (DTCP) போன்ற அமைப்புகளில் அனுமதி வாங்க வேண்டியது அவசியம்.

பஞ்சாயத்து அனுமதி

14-06-10 நகர்ஊரமைப்பு இயக்கம் (DTCP) சுற்றறிக்கையின்படி, பஞ்சாயத்துத் தலைவர், நகர்ஊரமைப்பு இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி வழங்க முடியும். குடியிருப்புக் கட்டிடம் கட்ட அதிகபட்சமாக 4,000 சதுர அடி அல்லது நான்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும். இரண்டு தளம் வரை கட்டிடம் கட்ட அனுமதி வழங்கலாம். இரண்டு தளத்துக்கு மேல் கட்டிடம் கட்டப் பஞ்சாயத்துத் தலைவரால் அனுமதி வழங்க இயலாது.

வணிகக் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு தளத்துக்கு மட்டும் அனுமதி வழங்க முடியும். அதேபோல் அக்கட்டிடம் 2,000 சதுர அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி (LPA)

இந்த அமைப்பு நகர்ஊரமைப்பு இயக்கத்தின் (DTCP) கீழ் இயங்குவதாகும். தமிழகத்தில் சென்னை நீங்கலாக 11 மாநகராட்சிகளிலும் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் உள்ளூர்திட்டக் குழுமத்தின் அலுவலகங்கள் உள்ளன.

உள்ளூர் திட்டக் குழுமத்தின் கட்டிடம் கட்டப் பின்பற்றப்படும் வழிமுறைகள்:

குழு மேம்பாட்டுக் கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் (Group Development Building) கான்கிரீட் தூணுடன் சேர்த்து நான்கு மாடி அல்லது தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடி இருக்க வேண்டும். மேலும் மொத்தக் கட்டுமானப் பரப்பளவு 25,000 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். மேலும் 50 குடியிருப்புகளுக்குள் இருக்க வேண்டும். அதேபோல் 15 மீட்டர் நீளத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் சாலை, குறைந்தபட்சம் 9 மீட்டர்அல்லது 29.52 அடி இருக்க வேண்டும். தீயணைப்புத்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். தாசில்தாரிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். அந்த நிலமானது புறம்போக்கு நிலமாக இருக்கக் கூடாது.

நிலம் கையகப்படுத்துதலில் அரசாங்கத்திடமிருந்து 4 (1) Notification வழங்கவில்லை என்று குறிப்பிட வேண்டும். நிலச் சீர்திருத்தச் சட்டம் 1961, நிலஉச்ச வரம்புச் சட்டம் 1978 மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்குக் கீழ் அந்த நிலங்கள் வரவில்லை என்று குறிப்பிடப்பட வேண்டும். அரசாங்க வழக்கறிஞரிடம் சம்பந்தப்பட்ட இடத்துக்கான சட்ட ஆலோசனைகள் பெற வேண்டும்.

மழை நீர்சேகரிப்பு மற்றும் சூரிய மின்சக்தி நீர்ச் சூடாக்கி முறை போன்ற தகவல்கள் வரைபடத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். மனைக்கான அங்கீகரிக்கப்பட்ட அனுமதி விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

அமைப்பு (Institutions) கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் கான்கிரீட் தூணுடன் சேர்த்து நான்கு மாடி அல்லது தரை தளத்துடன் சேர்த்து 3 மாடி மொத்தக் கட்டுமானப் பரப்பளவு 25,000 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். அதேபோல் 15 மீட்டர் நீளத்திற்கு மேல் இருக்கக் கூடாது. பள்ளிக்கூடக் கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் தரைதளத்துடன் சேர்த்து 2 மாடியாக இருக்க வேண்டும். மொத்தக் கட்டுமானப் பரப்பளவு 25,000 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். நீதிபதி சம்பத் குழு அளித்த பரிந்துரைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

நகர் ஊரமைப்பு இயக்கம்

மொத்தக் கட்டிடப் பரப்பளவு 25,000 சதுர அடிக்கு மேல் இருந்தால் உள்ளூர்திட்டக் குழுமத்தால் அனுமதி வழங்க இயலாது.

அப்படியிருக்கும்பட்சத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தால் மட்டுமே அத்தகைய அனுமதி வழங்க இயலும். சென்னையில் இயங்கும் நகர ஊரமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் மூலமாகவே அனுமதிபெற வேண்டும். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

அதெல்லாம் சரிதான். நாம் வாங்கும் மனையை முழுவதுமாகப் பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பின்பற்றிதான் வீடு கட்ட வேண்டும்.

விதிமுறைகள்

பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ அந்த அளவில் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. 1,200 சதுர அடி (அரை கிரவுண்டு) மனை வாங்கினாலும், அதன் முழுவதும் வீடு கட்ட முடியாது.

நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 – 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.

அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். மொத்தப் பரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும்.

பிளான் முக்கியம்

நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.

அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரம் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அனுமதி கிடைக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படி இல்லையென்றால், பல காலத்துக்குப் பிறகு வீட்டை

விற்கும்போதோ அல்லது மாடி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்கும்போதோ பிரச்சினகள் ஏற்படலாம். எனவே பிளானில் உள்ளதுபடி வீடு கட்டுங்கள்.

கட்டிட அனுமதி வாங்காமல் நீங்கள் வீடு காட்டினால் அது உங்கள் வீட்டின் மதிப்பீட்டை முழுவதும் பாதிக்கும் வங்கியில் கடன்பெறும்போது உங்கள் வீட்டின் அனுமதி அளவையே வீட்டின் அளவாக எடுத்து கொள்வர்.  நீங்கள் அனுமதி பெறாமல் நீங்கள் பல மா டிகட்டிடம் கட்டியிருந்தாலும் அது வெறும் தரையாகவே கணக்கிடப்படும்.  எனவே அனுமதி பெறாமல் கட்டிடம் கட்ட வேண்டாம்.

Comments
Loading...