தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்து வரும் இக்காலங்களில் கட்டாயம் வீடுகளுக்கு போர்வெல் அவசியம் என்று ஆகிவிட்டது. அதுவும் ஒரு கட்டிடம் கட்ட ஆரம்பித்தவுடன் முதல் வேலையே போர்வெல் தான். இது ஒரு தொகை மதிப்பிடமுடியா வேலையாகவும். எவ்வளவு ஆழம் என்பது நாம் முன்னாடியே நிர்ணயிக்க முடியா செயலாகும். போரில் வரும் தண்ணீர் மற்றும் நமது தண்ணீர் தேவை இரண்டையும் பொறுத்தே அதை முடிவு செய்ய வேண்டும்.
கட்டிடத்தின் முதல் வேலை என்பதால் கையில் நிறைய பணம் இருக்கும் அதனால் எவ்வளவு ஆழம் என்றாலும் போட்டுவிடலாம் என தோன்றும். அதே நேரம் போர்போட்டு முடிந்தபின் அய்யோ இதுக்கே இவ்வளவு செலவு செய்து விட்டோமே மற்ற செலவுகளை எல்லாம் சமாளித்து வீடுவோமா என பயத்தையும் கொடுக்க கூடிய செயலும் ஆகும் . அதனாலேயே ஒப்பத்தகாரர்கள் போர்ப்போடும் வேலைய ஒப்பந்தத்தில் சேர்ப்பதில்லை, வீட்டு உரிமையாளர் தலையிலேயே கட்டிவிடுவர். எனவே இது கொஞ்சம் ரிஸ்க் ஆன வேலையே.
முதலில் நாம் செய்ய வேண்டியது நமது தண்ணீர் தேவை என்ன என்பதை முதலில் பொறியாளர் மூலம் கணக்கிட்டு கொள்ளவேண்டும். பொறியாளர் கட்டிடத்தின் பயன்பாடு அங்கு வசிக்கும் மக்களின் தண்ணீர் பயன்பாடு, தயாரிப்பு நிறுவன கட்டிடமாக இருந்தால் தயாரிப்புக்கான தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை கணக்கிட்டு ஒரு நாளைக்கு மொத்த தண்ணீர் தேவை இவ்வளவு என கணக்கிடுவார். இன்றைய சூழ்நிலைகளை மட்டுமல்லாமல் நாளைய கட்டிட விரிவாக்கம் மற்றும் கட்டிட பயன்பாடு மற்றம் என பல விஷயங்களை ஆராய்ந்து இந்த தண்ணீர் தேவை கணக்கிடப்படும்.
பின்பு அருகில் உள்ள வீடுகள் அல்லது ஏற்கனவே அருகில் போர்போட்டு உள்ளவர்களிடம் விசாரித்து அந்த ஏரியாவில் எந்த அளவில் நிலத்தடி நீர்மட்டம் உள்ளது. தண்ணீரின் ஹார்ட்னெஸ் மற்றும் PH அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த நீரை RO செய்து குடிநீராக பயன்படுத்த இந்த காரணிகள் அங்கு நம் செலவை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.
ஆராய்ந்து அதன்படி நமக்கு கிடைக்கும் விஷயங்களை வைத்து ஓரளவு நமது செலவை கணக்கிடலாம். இது நமது பட்ஜெட்டை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் இருக்கா என்பதை உறுதிசெய்து கொண்டபின்பே நாம் அடுத்த கட்ட வேலைக்கு செல்ல வேண்டும்.
நாம் கட்டுவதோ ஒரு குடும்பம் இருக்க கூடிய வீடுதான் மொத்தமே 4 நபர்கள்தான் இருக்க போகிறார்கள். அந்த பிளாட்டில் போர்வெல் போட எப்படியும் ஒரு இலட்சத்திற்கு மேல் வரும் அதுவும் இந்த இடத்தில் தண்ணீர் வந்தால்தான் வரும் என உறுதியில்லாமல் சொல்கிறார்கள் என்றால் நிச்சயம் போர்வெல் வேலையை நிராகரித்து விட்டு அடுத்த கட்ட வேலைக்கு சென்று விட வேண்டும்.
போர்வெல் இல்லாமல் எப்படி சமாளிப்பது ?
போர்வெல் இல்லையென்றால் எப்படி தண்ணீர் தேவையை சமாளிப்பது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இப்போது சம்ப் எனப்படும் நிலத்தடி தொட்டி அணைத்தது வீடுகளிலும் காட்டவே செய்கின்றனர் அதை கொஞ்சம் பெரிதாக கட்ட வேண்டும் நமது வீட்டில் மழைநீரை சுத்தம் செய்து நமது தொட்டியில் சேமித்து பயன்படுத்தலாம். (போர்வெல் போட்டாலுமே இதை செய்ய வேண்டும் ) அதுவே நமக்கு பாதிக்குமேல் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து விடும். பற்றாக்குறைக்கு விலைக்கு லாரியில் தண்ணீர் வாங்கி அத்தொட்டியில் நிரப்பி கொள்ளலாம். இதற்க்கு போர்வெல் போடுவதைவிட மிக குறைத்த அளவே செலவாகும். இதைப்பற்றி வேறு பதிவில் உங்களுக்கு அளிக்கிறேன்.
இப்போ நம் பட்ஜெட்டுக்குள் இருந்தால் நாம் அடுத்த கட்ட போர்வெல் வேலைக்கு செல்லலாம்.
போர்வெல் ஓரளவு நம் பட்ஜெட்டில் இருப்பதை உறுதி செய்த பின் அடுத்த தலைவலி எந்த இடத்தில் போர்வெல் அமைப்பது ? இதற்க்கு பலரும் பலவழிகளை சொல்வார்கள் இது நிச்சயம் நமது அதிர்ஷ்டம் சம்பத்தப்பட்ட விஷயம் மட்டுமே ஏனென்றால் நிச்சயம் உறுதியாக தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அவைகள் எல்லாம் ஓன்று அதிக செலவு பிடிக்கும் உத்தியாக இருக்கும் அல்லது நமது மனை அளவுக்குள் மட்டும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாத வழியாக இருக்கும். நீரோட்டம் பார்ப்பது என்பது நமக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு செயல் மட்டுமே அதனால் அதற்க்கு அதிக செலவு செய்வதை தவிர்த்து உங்கள் மனையில் நீங்கள் எந்த இடம் சரியாக இருக்கும் என்பதை பொறியாளர் மற்றும் ஒப்பந்தக்காரருடன் விவாதித்து ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நம்பிக்கை வேண்டும் என்றால் உள்ளூரில் உள்ள ஒரு சிறந்த நீரோட்டம் பார்ப்பவரை வைத்து இடத்தை தேர்ந்து எடுங்கள் அப்போது பொறியாளர், ஒப்பந்தகாரரை வைத்து அந்த இடம் சரியாக வருமா என பார்த்து கொள்ளுங்கள் இல்லையென்றால் வேறு இடம் பார்த்து தர சொல்லுங்கள். நிச்சயம் செய்து தருவார்கள். எப்படியும் நீங்களும் வா ஸ்துவும் விரும்புவதால் ஈசானிய மூலையிலேயே உங்களுக்கு போர்வெல் இடம் கிடைக்கும்.
எந்த அளவு போர்வெல் போடுவது? 4 ½ இன்ச் அல்லது 6 இன்ச் எது சிறந்தது ?
நாம் நினைத்தது போல் கட்டிடத்திற்கு பாதிப்பு வராத வகையில் இடம் தேர்வாகிவிட்டது அடுத்து என்ன என்ன அளவு போர்வெல் போடுவது 4 ½ இன்ச் அல்லது 6 இன்ச். வீட்டுக்குத்தான் 4 ½ போதுமானது என சிலரும் 6 இன்ச் போடு இன்னைக்கு சரி நாளைக்கு பத்தலைனா திரும்பவுமா போடப்போற என சிலரும் நமக்கு அறிவுரை சொல்லி குழப்பி இருப்பர்.
நம் இடம் காலியிடமாக இருந்து 6 இன்ச் போடும் வகையில் எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால் உறுதியாக 6 இன்ச் போர்வெல் அமைக்கவும் அதுவே சிறந்தது. 4 ½ இன்ச் போர்வெல் 300 அடிக்குமேல் போடமுடியாது. 6 இன்ச் போர் என்றால் 1000 அடிவரை கூட போட முடியும். பழைய வீடுகள் அல்லது சிறு சந்துகளுக்குள் உள்ள காலியிடம் என்றால் உங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை 4 ½ இன்ச் போர்வேல்தான். 4 ½ இன்ச் போர்வெல் கட்டணம் குறைவுதான் அதேபோல் பயன்களும் குறைவுதான். எனவே வாய்ப்பு இருந்தால் உங்கள் முதல் தேர்வு 6 இன்ச் போர்வெல்த்தான் பட்ஜெட் பாதிக்கும் மற்றும் ஆழம் குறைவுதான் என்றால் 4 ½ இன்ச் போர்வெல் தேர்ந்து எடுங்கள் . மொத்தமே 150 அடிக்குள் இந்த ஏரியாவில் தண்ணீர் வருகிறது அதுவும் அதிக அளவு தண்ணீர் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் 4 ½ இன்ச் போர்வெல் தேர்ந்தெடுக்கலாம் அந்த இடத்தில் நீங்கள் 6 இன்ச் தேர்ந்து எடுத்தால் அது வீண் செலவே.
அப்புறம் என்ன போர்வெல் ஓட ஆரம்பித்து விட்டது நமக்கும் டென்ஷன் ஆரம்பித்து விட்டது தண்ணீர் பார்க்கும் வரை நிம்மதி இருக்காது. பக்க்கத்து வீட்டுக்காரர் வேற இன்னும் வரலையா எனக்கெல்லாம் 20 அடியிலேயே மேலவரைக்கும் பீச்சி அடிச்சிக்கிட்டு வந்திருச்சுன்னு வயித்துல புளிய கரைச்சு விட்டுட்டார். ஒன்னும் கவலை படாதீங்க அவர் ஐந்து வருடத்திற்கு முன் நல்ல மழை காலத்துல போர்போட்டு இருப்பார். இப்ப நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருக்கும் இப்போ வறட்சியான காலமாக வேறு இருக்கும் கொஞ்சம் ஆழம் போகலாம் அதனால் ஒன்றும் தப்பில்லை ஆழத்தில் எடுக்கும் தண்ணீரே நமக்கு எப்போதும் கிடைக்கும் அதனால் கவலை படாதீர்கள்.
400 அடி ஓடிவிட்டது வெறும் ஈர கசிவாகத்தான் வருகிறது தண்ணீர் வழிந்து ஓடவில்லை, ஆனால் ஒப்பந்தகாரர் இதுவே நல்ல தண்ணீர்தான் என்று ஆறுதல் சொல்கிறார் போர்வெல் போடுபவர்களும் அதற்க்கு ஒத்து சொல்கிறார்கள் அது எப்படி சரியாகும் ? ஆம் நீங்கள் 6 இன்ச் போர்வெல் அமைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் அது உங்களுக்கு போதுமான தண்ணீர் கொடுக்கும். ஏனென்றால் 400 அடியில் ஓடிக்கொண்டு இருப்பதால் பிரஷர் அதிகமாக கொடுத்து குடைந்து கொண்டு இருக்கும் அதவும் பாறையாக இருப்பதால் அதிக வெப்பம் ஏற்படும் அதில் தண்ணீர் ஆவியாகிவிடும் அதனால் ஈரமண் கிடைத்தாலே ஒரு குடும்பத்திற்கு அது போதுமான தண்ணீராக இருக்கும்.
அப்போ அத்துடன் நிறுத்தி கொள்ளலாமா ? கூடாது இப்படி தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் நீங்கள் இன்னும் ஆழமாக போடுவே சிறந்தது. இன்னும் இருநூறு அடி போட்டாலும் இதே தண்ணீர்தான் வரும் என்கின்றனர் அதனால் நிறுத்தி கொள்ளலாமா ?. இப்படி குறைவான தண்ணீர் உள்ள இடங்களில் நாம் இந்த போர்வெல் குழாயையே ஒரு கிணறாக பயன் படுத்த வேண்டும் அதாவது ஆழம் அதிகமாக இருக்கும் போது அதில் அதிக தண்ணீர் ஊற்றாக நிற்கும் அவற்றை எடுத்தாலே உங்கள் தண்ணீர் தொட்டி நிறைந்து விடும்.
உதாரணத்திற்கு :
போர்வெல் குழாயின் அகலம் 6 இன்ச், மொத்த உயரம் 500 அடி, போர்வெல் குழாய் இறக்கியது 450 அடி, மேலிருந்து 20 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. ஆக தண்ணீர் போர்வெல்லில் இருக்கும் அளவு 6 இஞ்ச் விட்டத்தில் 430 அடி ஆழம்.
தண்ணீர் கொள்ளளவு :
= r2 x h
= (3.14 x (0.25)2) * 430 = 94.2 cft
1cft = 28.32 ltrs
ஆக 84.39 x 28.32 = 2390 லிட்டர் தண்ணீர்
அதாவது எப்போதும் உங்கள் போர்வெல் குழாயில் 2400 லிட்டர் தண்ணீர் இருக்கும் நீங்கள் இரண்டாயிரம் லிட்டர் மேல் நிலைத் தொட்டி வைத்திருந்தாலும் போர்வெல்லில் இருக்கும் நீரை எடுத்தாலே தொட்டி நிறைந்து விடும்.
போர்வெல் முடிந்தது என்ன மோட்டார் பொருத்துவது ?
தற்போது submersible பம்ப் வந்து விட்டது அதிக ஆழத்தில் தண்ணீர் எடுக்கவும், அதிவேகமாகவும், குறைந்த மின்செலவிலும் தண்ணீர் எடுக்க சிறந்த பம்ப் இது.
சாதாரணமாக 10 நிமிடம் முதல் 15 நிமிடத்தில் 1000 லிட்டர் தண்ணீர் எடுக்கவல்லது இந்த மோட்டார்.
நாம் கீழ்வரும் விஷயங்களை பொறுத்தே மோட்டர் தேர்வு செய்யமுடியும் .
அடுத்து எவ்வளவு HP அளவுள்ள மோட்டார் பொருத்துவது என பார்ப்போம் .
- போர்வெல்லின் மொத்த ஆழம்
- போர்வெல் போடும்போது எந்த ஆழத்தில் அதிக அளவு தண்ணீர் கிடைத்தது
- தற்போது எந்தனை அடி ஆழத்தில் தண்ணீர் மட்டம் உள்ளது
- குடியிருப்போரின் ஒருநாளைய தண்ணீர் தேவை
- எத்தனை மாடி உயரம் தண்ணீர் மேலே ஏற்ற வேண்டும்
- கட்டிடத்தில் என்ன வகை மின்சாரம் பயன்படுத்தப்படும் (Single Phase அல்லது Three phase )
மேற்காணும் அனைத்து காரணிகளும் உங்கள் மோட்டார் தேர்வின் ஒரு அங்கமாகும்.
இதில் நாம் 4 வது குறிப்பு ஒரு நாளைய தண்ணீர் தேவை இதை எப்படி கணக்கிடுவது.
அது முக சுலபம் ஒரு நாளைக்கு ஒரு நபரின் தண்ணீர் தேவை 120 லிட்டெர்கள் என நிர்ணயித்துள்ளார்கள்.
ஆக ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் ஒரு நாளைய தண்ணீர் தேவை 120 x 4 = 480 லிட்டர்
1000 லிட்டர் தொட்டி வைத்தால் இரண்டு நாளைக்கு ஒரு முறை நாம் நீர் ஏற்ற வேண்டும்.
எத்தனை HP மோட்டார் என்பது போர்வெல்லின் ஆழத்தை பொறுத்து நிர்ணயிக்க படுகிறது.
சாதாரணமாக 200 அடிவரை 1HP மோட்டாரும் 400 அடிவரை 1.5 HP மோட்டாரும் அதற்க்கு மேல் 2 HP மோட்டரும் பயன்படுத்த படுகிறது இது கம்பெனிக்கு தகுந்தவாறு மாறுபடுகிறது.
ஒரு நண்பர் கேட்டார் 150 அடிதான் போர் பைப்பை இறக்கி உள்ளேன் நான் 1.5 HP போடலாமா இல்லை 1 HP போட்டுக்கவா பக்கத்தில் ஒருவர் 1.5HP மோட்டார் போட்டால் சீக்கிரம் தொட்டி நிறைந்து விடும் என்கிறார் நான் என்ன செய்வது இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றார்.
அவருக்காக சில விளக்கம் இது நமது மின்சார அளவை பாதிக்கும் விஷயம்.
1 HP மோட்டாரை விட கொஞ்சம் 1.5 HP மோட்டார் விலை அதிகம் என்பது ஒரு பக்கம் நமது மின்சாரம் பயன்படும் அதிகரிக்கும் என்பது ஒரு பக்கம் பாதிக்கும்.
HP என்பது House Power என்பதையே குறிக்கும்.
1HP என்பது 746 watt ஆகும். அதாவது
- 0.25 hp = 186.5 watt =0.187 kiloWatts (kW)
- 0.50 hp = 373 watt = 0.373 kiloWatts (kW)
- 1.00 hp = 746 watt = 0.746 kiloWatts (kW)
- 1.5 hp = 1119 watt = 1.119 kiloWatts (kW)
- 2.00 hp = 1492 watt = 1.492 kiloWatts (kW)
ஒரு மணிநேரம் 1 HP மோட்டார் ஓடினால் 0.746 KW செலவு ஆகும்.
அதுவே 1.5HP மோட்டார் ஓடினால் 1.119 KW செலவு ஆகும்
ஒரு கட்டிடத்திற்கு தினமும் 15 நிமிடம் என 1 மாதத்திற்கு 1 HP மோட்டார் ஓடினால் அதன் செலவு பின்வருமாறு
1.00 hp pump = 0.746 x 7.5 மணி = 5.595 KW செலவு ஆகும்
1.5 hp pump = 1.119 x 7.5 மணி = 8.39 KW செலவு ஆகும்
1 HP மோட்டார் 1000 லிட்டர் எடுப்பதுக்கும் 1.5HP எடுப்பதுக்கும் ஒரு சில நிமிடங்களே வித்தியாசம் வரும்.
எனவே நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் உங்கள் தேவை என்ன வென்று.
மேலும் விபரங்களுடன் உங்களை சந்திக்கிறேன் அடுத்த பதிவில்.