சொந்த வீட் டு கனவு அனைவருக்கும் உண்டு. பாரதியார் கூட தன் பாடலில்
“காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும்”
பாரதிக்கு கூட நிலத்தின் மீது கனவு உண்டு. கடந்த 2007க்கு பின் மனைகளின் விலையேற்றம் பலமடங்கு உயர்ந்து வருகிறது. அதனால் பலரும் முதலீடாகவும் காலிமனை இடங்களில் பணத்தை விதைக்கின்றனர். தங்கம் மற்றும் மனையிடம் என்றும் விலை குறையா விஷயங்களாக இருப்பதால் துணிந்து இதில் முதலீடு செய்கின்றனர்.
குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கிவிட முடியாது முதலீடாக வாங்கிகுபவர்களாக இருந்தாலும் சரி சொந்த வீடு கட்டுவதற்காக வாங்குபவர்களாக இருந்தாலும் சரி தங்கள் விருப்பம் நிறைவேற என்றால் சில விஷயங்களை ஆராய்ந்த பின்பே இடங்களை வாங்க வேண்டும். நாம் இந்த கட்டுரையில் சொந்த வீட்டு கனவில் இருப்பவர்களுக்கான இடத்தேர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சாதாரணமாக ஒருத்தர் இடம் வாங்க இருக்கிறார் என்றால் பலரும் பல விஷயங்களை சொல்லி குழப்பி விடுவார்கள். முதலில் நீங்கள் உங்கள் தேவைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள் ஒரு மனையில் உங்களுக்கு என்ன என்ன தேவை என்று,
முதலில் உங்கள் வீட்டுக்குள் என்ன என்ன வேண்டும் என்று பட்டியலிடுங்கள் அப்போதுதான் உங்கள் மனையிடத்தின் அளவை தீர்மானிக்க முடியும்.
எத்தனை ரூம்கள், ஹால் அளவு, சமையலறை அளவு, சாப்பிட்டு அறை, பாத்ரூம்கள், படிக்கட்டு உள்புறமா வெளிப்புறமா ? தரை தொட்டிகள், சுற்றிலும் காலியிடம், கார் நிறுத்துமிடம் என உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியலிடுங்கள் அதில் அத்தியாவசியம், இருந்தால் நல்லது என இரண்டு வகையாக பிரியுங்கள் ஏனென்றால் நாம் பார்க்கும் இடம் அத்தியாவசிய தேவை பட்டியலில் உள்ளதை கட்டாயம் பூர்த்தி செய்யும் படி இருக்க வேண்டும்.
இப்போது நிச்சயம் இடம் இவ்வளவு இருந்தால்தான் நமது தேவைகள் பூர்த்தி அடையும் என்பது திட்ட வட்டமாக தெரிந்து விட்டது. இனி நாம் இடைத்தேர்வை அதற்கேற்றார் போல் தேடலாம்.
இனி இடத்தேர்வுக்கான பட்டியல் தயார் செய்ய வேண்டும். அதிலும் அத்தியாவசியம், இருந்தால் நல்லது என இரண்டு பட்டியல் இதில் நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள்
- குடிநீர் வசதி
- சாலை வசதி
- பிரதான சாலை தூரம்
- மருத்துவ வசதி
- அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் தூரம்
- இடத்தின் திசை
- போக்குவரத்து வசதி
- நிலத்தடி நீர் மட்டம்
- கழிவு நீர் கடத்தும் வசதி
- மனை இடத்தின் முந்தைய பயன்பாடு
- பள்ளிகள்
- அருகில் உள்ள மக்களின் பழக்க வழக்கங்கள்
- இடத்தில் இதற்க்கு முன் ஏதும் வில்லங்கங்கள் இருந்ததா
- அதிகபட்ச இடத்தின் விலை
- குறைந்தபட்ச இடத்தின் அளவு
- மனை வீட்டடி மனையிடமா
- மனை கட்ட அனுமதி கிடைக்குமா
- வீட்டு கடன் பெற முடியுமா
பட்டியல் ரெடி இனி உங்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கலாம்.
நீங்கள் இடம் பார்க்கிறீர்கள் என்றால் போதும் ஊரில் உள்ள அனைவரும் முகவர்களாக மாறிவிடுவார்கள். நீங்கள் நிறைய முகவர்களை அணுகாதீர்கள் அது குழப்பத்தையே ஏற்படுத்தும். ஏதாவது அனுபவம் வாய்ந்த ஒரு முகவரை உங்களுக்கு தெரிந்தால் அல்லது நண்பர்களின் அனுபவத்தில் தேர்ந்து எடுங்கள். அவருடன் உங்கள் அடிப்படை தேவைகளை கூறுங்கள் இந்த வசதிகள் உள்ள மனைகளை மட்டும் கூறுங்கள் என சொல்லி தேடலை ஆரம்பியுங்கள். முகவரிக்கான கமிஷன் தொகையாக சதவிகிதத்தில் முடிவு செய்யாமல் அவருக்கு முடித்து கொடுத்தால் இவ்வளவு தருகிறேன் என ஒரு தொகையை உறுதி செய்து கொள்ளுங்கள். சதவிகிதம் என்றால் அவர் விலையை ஏற்றி வைத்து முடிக்கவே முனைவர். அப்படி அதிக தொகைக்கு கைமாறினால்தான் அவருக்கு கமிஷன் அதிகம் கிடைக்கும். அதனால் அதை தவிர்க்க இவ்வளவு தான் தருவேன் என நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
முதலில் காட்டும் அனைத்து இடங்களும் உங்களுக்கு என்றே காத்திருப்பது போல் தோன்றும் மேற்கூறிய அனைத்து வசதிகளும் பூர்த்தி ஆகின்றனவா என்பதை உறுதிசெய்யும் வரை தேடல் தொடரட்டும்.
ஆசையை தூண்டும் வார்த்தைகளால் நம்மை எப்படியும் வாங்க வைக்க முயற்சி செய்வர் நாம் நமது தேவைகளிலும் நமது விலையிலும் உறுதியாக இருக்க வேண்டும். நமக்கு ரொம்ப பிடித்த இடமாக இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள கூடாது.
ஒரு வழியாக ஒரு இடம் நன்கு பிடித்து விட்டது, சாலை 23 அடி இன்னும் ஒரு மாதத்தில் சாலை வசதி வந்துவிடும் என்கின்றனர் 100 அடியில் தண்ணீர் உள்ளது, பக்கத்திலேயே அனைத்து வசதிகளும் உள்ளது, பஸ் போக்குவரத்தும் அருகில் உள்ளது, நமது எதிர்பார்த்த பட்ஜெட்க்குள் உள்ளது, வில்லங்கம் சரிபார்த்தாச்சு சரியாக உள்ளது, அடுத்து என்ன செய்வது முன்பணம் கொடுத்து விடலாமா ? அனைவரும் செய்யும் தவறு இதுதான்..

மணியிட அனுமதி பெற்ற மனையா ?
அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை உங்களுக்கு தெரிந்த பொறியாளர் ஒருவரை அணுகி இந்த இடம் மனையிட அனுமதி பெற்றுள்ளதா இங்கு மனை கட்ட அனுமதி வாங்க முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அதுதான் மிக முக்கியம். இடத்தை வாங்கிவிட்டு மனைகட்ட அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும் போது அங்கு அவர்கள் இது வீட்டடி அனுமதி பெற்ற இடம் கிடையாது இங்கு வீடுகட்ட அனுமதி தரமுடியாது என மறுத்து விடுவர். அப்போது நம் நிலைமை படுமோசமாகி விடும். நீங்களே நேரடியாக கூட நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதை உறுதிப்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால் புறநகர் பகுதிகளில் உள்ள 90 சதவிகிதத்திற்கு மேல் உள்ள இடங்கள் இப்படித்தான் உள்ளது.
பக்கத்தில் எல்லாம் வீடு கட்டியிருக்கிறார்கள் அதனால் ஒன்னும் பிரச்சினையில்லை என்று நம்மை மூளைச்சலவை செய்வர். அல்லது நான் கையில் ரொக்க பணம் வைத்துள்ளேன் வீட்டு கடன் எல்லாம் பெற மாட்டேன் அதனால் எனக்கு இந்த அனுமதி பற்றி கவலையில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள்.
ஒன்றை மற்றும் நினைவில் நிறுத்துங்கள் ஒவ்வொரு கட்டிடத்திற்கு கட்டிட அனுமதி என்பது இன்றியமையாத ஒன்று. இன்று உங்களுக்கு கடன் தேவைப்படாமல் இருக்கலாம் பின் உங்கள் தொழிலுக்கு முதலீட்டு தேவைக்கு வங்கியை அணுக வேண்டிய நிலை வரலாம் வங்கியை பொறுத்தவரை அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அது கட்டிடம் இல்லையென்றால் 10 மடியாக இருந்தாலும் அது வெறும் தரைதான். அதை மதிப்பிற்கு எடுத்து கொள்ள மாட்டார்கள். பத்து வருடங்களுக்கு முன் இருந்ததைவிட இப்போது கட்டுமான அனுமதி விஷயத்தில் இறுக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மௌலிவாக்கம் போன்ற சம்பவங்களால் இன்னும் அரசு விழித்து கொண்டு விட்டது. எனவே இந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை.
இப்போது அனுமதி பெறாத இடங்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு கொடுத்துள்ளது முடிந்தால் அந்த காலக்கெடுக்குள் அவரை அனுமதி பெற்று தர சொல்லுங்கள்.
பத்திரபதிவு
அதன்பின் நாம் கடன் பெற்றுத்தான் இடமே வாங்க போகிறோம் என்றால் பத்திர பதிவில் நீங்கள் கொடுக்கும் முழு தொகையையும் காட்ட வேண்டும். அதற்க்கு விற்பவர் ஒத்துக்கொள்வாரா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இவ்விரு முக்கிய விஷயங்களையும் உங்கள் அத்தியாவசிய தேவை பட்டியலில் வைத்து இதனுடன் உங்கள் அனைத்து முக்கிய தேவைகளையும் சேர்த்து உங்கள் தேடலை தொடங்குங்கள் உங்கள் மனை உங்களுக்கு தலைமுறைக்கும் சந்தோசத்தை தரும்.
இடமும், கட்டிடமும் நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு விட்டு செல்லும் சொத்து மட்டுமல்ல உங்கள் நினைவுகள், உங்களின் மீதான மதிப்பு, உங்களின் வாழ்க்கை சிறப்பு.
எனவே பொறுமையுடன் சிந்தித்து ஆசைகளை கட்டுக்குள் வைத்து சிறந்த இடங்களை தேர்ந்து எடுத்து உங்கள் கனவை உண்மையாக்குங்கள். உங்களுக்கு சிறந்த இடம் கிடைக்க எனது மனதார வாழ்த்துக்கள்!.
பொறி. ச.கார்த்திகேயன்
தேனி மாவட்ட செயலாளர்
Eengineers Club Tamilnadu Theni Maiyam
Leave a Reply