My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

ஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா ? கெட்டதா ?

advantages and disadvantages of Msand

0 2,184

Get real time updates directly on you device, subscribe now.

எம்சாண்ட் நல்லதா ? கெட்டதா?

 

மணல் இன்றைய தமிழக கட்டுமானத்துறையின் பெரிய தலைவலி ஆகிவிட்ட கட்டுமான பொருள்.  

 

இதுவரை போராடிய  விவசாயிகளுக்கும், சூழலியலார்களுக்கும் பெரும் வெற்றி என்றே சொல்லலாம்.  மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் வாயிலாக அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன.  

 

மணல் தட்டுபாடால் தமிழகத்தின் அனைத்து கட்டுமானங்களும் ஸ்தம்பித்துள்ளன. மணல் தட்டுபாடால்.  நாம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதை ஒரு நல்ல விஷயமாகவே எடுத்து கொள்ள வேண்டும்.

 

இப்பிரச்சினைக்கு தீர்வாகவே தற்போது மார்க்கெட்டில் நுழைந்திருக்கும் எம்சாண்ட் கருதப்படுகிறது.

 

ஒரு புது பொருள் அறிமுகப்படுத்தப்படும் போது எல்லாம் அதைப்பற்றிய நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அலசப்படும், பல சர்ச்சைகளும் எழும்.  அப்படித்தான் இந்த எம்சாண்ட் புழக்கத்தில் வந்த உடனே அதனுடன் சர்ச்சைகளும் வந்துவிட்டது. இங்கும் நாம் அந்த சர்ச்சைகளை கொஞ்சம் அலசி பார்ப்போம்.

எம்சாண்ட் தயாரிக்கும் முறை  :

 

எம்சாண்ட் இயற்கையான கருங்கல் பாறைகளை உடைத்து பொடியாக்கி அவற்றை சல்லடை கொண்டு சலித்து பின் நன்னீரால் கழுவி அதில் உள்ள பவுடர் போன்ற மண் மற்றும் கழிவுகள் நீக்கப்பட்டு தயாரிக்க படுகிறது.  இது எம்சாண்ட் (Manufactured Sand ) என அழைக்கப்பட்டாலும் அரசால் CS Sand (Crushed Stone Sand) என்ற பெயரிலேயே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு தனது கட்டுப்பாட்டில் நடக்கும் அனைத்து கட்டுமான வேலைகளுக்கும் எம்சாண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென உத்தரவே பிறப்பித்து விட்டது.

 

எம்சாண்ட் ஒரு சிறந்த மாற்று மணல் என்பது உண்மை.  இந்த செயற்கை மணல் சரியான முறையில் தயாரிக்க வேண்டும் சரியாக அளவில் சளித்து எடுக்க வேண்டும் கழிவுகள் முறையாக நீக்க பட வேண்டும்.  இது செயற்கையாக தயாரிக்கப்படுவதால் இதற்க்கு நிச்சயம் தர கட்டுப்பாடு அவசியம்.

எம்சாண்ட்டின் உறுதித்தன்மை :

 

இம்மணல் செயற்கையாக உருவாக்குவதால் இதன் முனைகள் கூறாக உள்ளது அதனால் சிறந்த கிரிப் இருக்கின்றது. இயற்கை மணல் என்றால் கூட அதன் முனைகள் மழுங்கி இருக்கும்.  கருங்கல் துகள் என்பதால் சிறந்த திட தன்மையுடன் உறுதியாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

இது கட்டுமானத்தின் எந்த வேலைக்கும் இது சிறந்ததாக உள்ளது.  பூச்சு வேலைகளுக்கு பயன்படுத்தும் போது இதனுடன் மணல் கலக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.  அப்போதுதான் பூச்சு சிறந்த மேல்பரப்புடனும் வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும் . அவ்வாறு கலக்கப்படும் மணல் 15 சதவிகிதம் வரை இருக்கலாம்.  

 

மணலுடன் ஒப்பிடும் போது இதன் விலையும் குறைவாகவே உள்ளது.

 

அருகிலேயே குவாரிகள் இருப்பதால் எளிதில் கிடைக்கிறது.  

 

எம்சாண்டின் குறைபாடுகள் :

 

மக்கள் இதன் வண்ணம் சிமெண்டின் வண்ணத்தை ஒற்றியிருப்பதால் கலவை விகிதத்தில் குழப்பம் ஏற்படும் என இதனை ஏற்க தயங்குகின்றனர்.  இந்த பயத்தை தயாரிப்பாளர்கள் நன்கு பயன்படுத்தி கொள்கின்றனர் அதாவது உறுதியான கருங்கல்லுக்கு பதிலாக திடம் குறைந்த வெள்ளை கற்களை பயன்படுத்தி எம்சாண்ட் தயாரிக்கின்றனர் இதற்க்கு விலையும் அதிகம் வாங்குகின்றனர்.  இது மிகவும் தவறான செயலாகும். அந்த எம்சாண்ட் உறுதி குறைவானதே.

 

மணல் தட்டுப்பாடை குறைப்பதற்காக அதிக அளவில் எம்சாண்ட் குவாரிகள் உருவாவதை அரசும் முறைப்படுத்தவில்லை இதனால் இதன் தரம் குறைந்து கொண்டே வருகிறது.

 

எம்சாண்டிற்காக அதிக அளவில் கருங்கற்கள் மலைகளில் இருந்து எடுக்க படுவதால் தற்போது இறைக்கை மணலுக்கு ஏற்பட்டுள்ள விளைவுகள் இதனாலும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

 

மலைவளம் அழிக்கப்பட்டு காடுகள் அழியும் நிலை உருவாகும் இதனால் மழை வளமும் அழியும்.

 

எம்சாண்ட் தயாரிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவை, இயந்தியங்கள் பயன்படுத்த அதிக அளவில் மின்சாரம் தேவை. அது மட்டுமல்லாமல் கருங்கல் உடைக்கப்படும் பொது வெளியேறும் சிலிக்கோசிஸ் என்ற துகள்களால் தொழிலாளர்களுக்கும் அவற்றை சுற்றி குடியிருக்கும் மக்களுக்கும் நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

குவாரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் உள்ள கல்துகள்கள்  நிலங்களில் படிந்து மழை நீர் நிலத்தினுள் செல்வதை தடுக்கிறது.

 

முடிவுரையாக  :

 

இந்த எம்சாண்ட் கட்டுமான வேலைக்கு மிக சிறந்த ஓன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இதை தாராளமாக அணைத்து கட்டுமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.  மக்கள் இதன் வண்ணத்தை பற்றி கவலை கொள்ளாமல் கருங்கல் துகள் எம்சாண்ட் மட்டுமே பயன்படுத்த முன்வரவேண்டும்.

 

ஆனால் நம் எதிர்காலத்திற்கும்  சுற்று சூழல் பாதுகாப்பிற்கும் இது ஏற்றதல்ல இதன்மூலமும் நிச்சயம் மழைவளமும் , மலைவளமும், நிலத்தடி நீர் மட்டமும் நிச்சயம் பாதிக்கப்படும்.

 

எனவே மணலில்லா கட்டுமானத்திற்கு நாம் தயாராக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம்.  

 

இதுபோலவே அடுத்தது செங்கல்லும் மணல் தட்டுப்பாட்டால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது இதை நாம் அடுத்த கட்டுரையில் பாப்போம்.

Comments
Loading...