How to calculate Septic Tank size and Water Tank Size for your home ?
நமது புதிய வீட்டிற்கான தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் அளவுகளை கணக்கிடுவது எப்படி ?
புதிய வீடு கட்டும்போது நாம் வீட்டிற்கு பிளான் போடும்போது நாம் அனைத்து ரூம் அளவுகளையும் இன்ச் அளவில் கணக்கிட்டு அமைக்கிறோம், கார் நிறுத்தும் இடத்தை கூட நாம் கணக்கிட்டு ஒதுக்குகிறோம், ஆனால் முக்கிய தேவையான மேல்நிலை தண்ணீர் தொட்டி, கீழ்நிலை தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் என்ன அளவு வேண்டும் என்று நாம் கணக்கிட்டு இருக்கிறோமா ?
ஒப்பந்தகாரர் அவருக்கு என்ன அளவு ஒத்து வருகிறதோ அதை சொல்வார் நாமும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். அது நம்வீட்டிற்கு போதுமான அளவா என நாம் எப்படி தெரிந்து கொள்வது ?
பெரிய கட்டிடங்களுக்கு ஆர்க்கிடெக்ட் அல்லது இன்ஜினீயர் அளவு கணக்கிட்டு பிளான் கொடுத்து விடுவார்கள் நம்மை போன்று சிறிய வீடுகளை கட்டும்போது நாமேதான் கணக்கிட வேண்டும். அல்லது ஒரு இன்ஜினியரை அணுகி அவற்றின் அளவுகளை பெறலாம்.
மேல்நிலை தொட்டி அளவை எவ்வாறு கணக்கிடுவது என பார்ப்போம் :
ஒரு தனி மனிதனின் ஒரு நாளைய தண்ணீர் தேவை 135 லிட்டர் என் கணக்கிடப்பட்டு உள்ளது. அவை என்ன என்ன என்றால்,
குடிநீருக்கு = 5 லிட்டர்
சமையல் = 5 லிட்டர்
குளிப்பதற்கும், கழிவறைக்கும் = 85 லிட்டர்
துணி துவைப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவதற்கும் = 30 லிட்டர்
வீட்டை சுத்தப்படுத்துவர்க்கு = 10 லிட்டர்
போன்றவை ஒரு தனி மனிதனுக்கு தேவையான ஒருநாளைய தண்ணீர்.
குடும்பத்தில் 4 நபர்கள் என்றால் = 135 x 4 = 540 லிட்டர் (குடும்பத்திற்கு தேவையான ஒரு நாளைய தண்ணீர்)
மொத்த தண்ணீர் தேவை கணக்கிட்டாச்சு இந்த அளவு கொள்ளளவை கண்டுபிடித்தால் போதும். அதற்க்கு நமக்கு தொட்டியின் நீளம், உயரம், அகலம் இவற்றில் எதாவது ஒன்றாவது நமக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
கணக்கீட்டின்படி 1கன மீட்டர்க்கு 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
எனவே நமக்கு தேவை = 540 / 1000 = 0.54 கனமீட்டர்
நாம் தொட்டியின் உயரம் 0.6 மீட்டர் என நாம் தேர்ந்து எடுத்து கொண்டால்
= 0.54 / 0.6 = 0.9 சதுர மீட்டர்
நீளம் 0.3 மீட்டர் என எடுத்து கொண்டால்
அகலம் = 0.9 / 0.3 = 0.3 மீட்டர் அகலம்
அதாவது தொட்டியின் நீளம், உயரம், அகலம் = 0.3 x 0.6 x 0.3 ஆகும்
இதையே அடி அளவில் கணக்கிட்டால் :
1 கனமீட்டர் = 35.31 கண அடி
35.31 கணஅடி = 1000 லிட்டர்
1 கணஅடி = 28.32 லிட்டர்
540 லிட்டர் = 540/28.32 = 19 கணஅடி
உயரம் இரண்டு ஆதி என்று எடுத்து கொண்டால்
= 19/2 = 9.5 சதுரடி
நீளம் 3 அடி என்று எடுத்து கொண்டால்
அகலம் = 9.5 /3 = 3.17 அடி
ஆக தொட்டியின் அளவு = உயரம் = 2 அடி, நீளம் = 3 அடி, அகலம் = 3.17 அடி
அவ்வளவுதான் இதேபோல் உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் என்ணிக்கைக்கு ஏற்றாற்போல் உங்கள் தண்ணீர் தொட்டியின் நீள அகலத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
குறிப்பு :
இதில் ஒரு நாளைய தேவையே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. தினமும் தண்ணீர் தொட்டி காலியாகி மீண்டும் நீர் நிரப்ப வேண்டும் அப்படியென்றால்தான் தொட்டியில் தூசுகள் தங்காது, புழுவும் வராது. உங்கள் ஏரியாவில் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைக்கும் என்றால் அதற்கேற்றார்போல் வடிவமைத்து கொள்ளவும்.
செப்டிக் டேங்க் வடிவமைப்பு :
தண்ணீர் தொட்டி அளவுக்கு நாம் செப்டிக் டேங்க் கணக்கிட மெனக்கிட வேண்டியதில்லை. செப்டிக் டேங்க் எப்படி அமைய வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே போதும் என்ன அளவில் அமைக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து விடலாம்.
செப்டிக் டேங்க் நீள் செவ்வக வடிவமாகவோ அல்லது சிலிண்டர் வடிவமாகவோ அமைக்கலாம்.
நீள வாக்கிலே அமைக்க வேண்டும் அதாவது அதிக ஆழமாக இருக்க கூடாது அப்படி இருந்தால் அது உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ஓட்டத்தில் குறுகிய சுற்று வட்டத்தை ஏற்படுத்தும்.
செப்டிக்டேங்க் நீளம் அதன் அகலத்தை விட மூன்று மடங்கு இருக்க வேண்டும். குறைந்தது 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும்.
செப்டிக்டேங்க் கொள்ளளவு கண்டுபிடிக்க ஒரு அட்டவணை உள்ளது அதன்படி கொள்ளளவை கண்டு பிடிக்கலாம். அதாவது இந்த அட்டவணையில் நமது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது.
கழிவுநீர் அளவு லிட்டரில் | குறைந்தளவு செப்டிக் டேங்க் கொள்ளளவு லிட்டரில் |
0- 2000 | 3500 |
2001-2800 | 4500 |
2801-3500 | 5700 |
3501-4800 | 7200 |
4801-9500 | 12000 |
9501-19000 | 22000 |
மேலே நாம் தண்ணீர் தொட்டிக்கு கணக்கிட்ட படியே இதையும் நாம் கணக்கிட்டு கொள்ளலாம். மறந்து விட வேண்டாம் நீளம் அதன் அகலத்தை விட மூன்று மடங்கு இருக்க வேண்டும்.